சினிமா செய்திகள்

வீட்டை காலி செய்ய மறுக்கிறார்: மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார் + "||" + He refuses to vacate the house On daughter Vanitha Actor Vijayakumar complains to police

வீட்டை காலி செய்ய மறுக்கிறார்: மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்

வீட்டை காலி செய்ய மறுக்கிறார்: மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்
படப்பிடிப்புக்காக வாடகைக்கு கொடுத்த வீட்டை காலி செய்ய மறுப்பதாக மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் செய்தார்.
பூந்தமல்லி,

பிரபல நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பிரமாண்டமான பங்களா வீடு, மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர், 19-வது தெருவில் உள்ளது. இந்த பங்களா வீட்டில் ஏராளமான அறைகள் உள்ளன. சினிமா படப்பிடிப்புக்காக இந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதாவுக்கு சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கொடுத்து உள்ளார். ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலும் வனிதா, இதுவரையிலும் அந்த வீட்டை காலி செய்யாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மகள் வனிதாவிடம் விஜயகுமார் கேட்டபோது, “இது என்னுடைய சொத்து. காலி செய்ய முடியாது” என்று கூறியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து விஜயகுமார், மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று காலை மதுரவாயல் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரிடமும் அவர், இந்த வீட்டில் எனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

இது குறித்து செய்தி சேகரிக்க நிருபர்களும் அங்கு சென்றனர். இதை பார்த்த வனிதா, அந்த வீட்டில் இருந்து ஆவேசமாக வெளியே வந்து, நிருபர்களிடம் தகராறு செய்தார். அப்போது அவர், தகாத வார்த்தைகளால் பேசியதுடன், போலீசார் முன்னிலையிலேயே நிருபர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடமும் நேற்று மாலை நடிகர் விஜயகுமார் இது தொடர்பாக புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் கூறும்போது, “இந்த புகார் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த சொத்தின் ஆவணங்களை கொடுக்கும்படி விஜயகுமார், வனிதா இருவரிடமும் கேட்டு உள்ளோம். அதனை ஆய்வு செய்தபிறகுதான் இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த வீட்டில் வனிதா அத்துமீறி இருப்பதாக தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நடிகை வனிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்ப விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். அப்போது தனது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது தந்தை-மகள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.