‘ஜேம்ஸ் பாண்ட் 25’ படத்துக்கு புதிய இயக்குனர்


‘ஜேம்ஸ் பாண்ட் 25’ படத்துக்கு புதிய இயக்குனர்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 5:34 PM GMT)

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இயான் பிளமிங்க் நாவலை அடிப்படையாக வைத்து பாண்ட் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்களுக்கு பெரிய மரியாதை உள்ளது. இந்த படங்கள் உலகம் முழுவதும் வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன.

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் தயாராகும் 25–வது படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர். தொடர்ந்து 4 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரேக் இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக கறுப்பு இனத்தை சேர்ந்த இட்ரிஸ் எல்பா ஜேம்ஸ் பாண்டாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

பின்னர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பது உறுதியானது. இந்த படத்தை ‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தை இயக்கி பிரபலமான டேனி பாய்ல் டைரக்டு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென்று படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

டேனியல் கிரேக்குக்கு இதுதான் கடைசி பாண்ட் படம் என்பதால் கிளைமாக்சில் அவர் இறந்து விடுவதுபோல் காட்சி வைக்க சொன்னார்கள். ஜேம்ஸ் பாண்டை சாகடிப்பது கேலிக்குரியது என்று கண்டித்து அவர் விலகி விட்டதாக கூறப்பட்டது.

இதனால் ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கும் புதிய டைரக்டர் யார் என்று உலகம் முழுவதும் உள்ள ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் 25–வது படத்தை கேரி புகுனகா இயக்குவார் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

இவர் ஏற்கனவே விக்டோரியா பாரா சைனோ, சின் நோம்ப்ரே, ஜானே ஐரே, பீட்ஸ் ஆப் நோ நே‌ஷன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

Next Story