பாலியல் தொந்தரவுகளும்.. இந்திய பெண்களின் தயக்கமும்.. நடிகை பிரீடா பின்டோ வெளிப்படுத்தும் உண்மைகள்


பாலியல் தொந்தரவுகளும்.. இந்திய பெண்களின் தயக்கமும்.. நடிகை பிரீடா பின்டோ வெளிப்படுத்தும் உண்மைகள்
x
தினத்தந்தி 23 Sep 2018 6:36 AM GMT (Updated: 23 Sep 2018 6:36 AM GMT)

ஆஸ்கார் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ பட புகழ் பிரீடா பின்டோ ஏறக்குறைய அமெரிக்கப் பிரஜையாகிவிட்டார். அவ்வப்போது இந்தியாவுக்கு பறந்து வந்து சென்று கொண்டிருக்கிறார்.

ஸ்கார் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ பட புகழ் பிரீடா பின்டோ ஏறக்குறைய அமெரிக்கப் பிரஜையாகிவிட்டார். அவ்வப்போது இந்தியாவுக்கு பறந்து வந்து சென்று கொண்டிருக்கிறார். அப்படி சமீபத்தில், தனது ‘லவ் சோனியா’ பட விளம்பர நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தார் பிரீடா. அப்போது அவரது பேட்டி:

‘லவ் சோனியா’ படத்துக்காக இந்தியா வந்திருக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

இந்தி, ஆங்கிலத்தில் வெளியான ‘திரிஷ்னா’ பட விளம் பரத்துக்காகவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நான் சுமார் பத்தாண்டுகாலமாக ‘லவ் சோனியா’ படம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். எனவே அதன் வெளியீட்டுக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குழந்தை புதிதாகப் பிறந்தது போலிருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உங்களின் சொந்த ஊராகிவிட்டதா அல்லது மறுபடி இந்தியாவுக்குத் திரும்பி இங்கே செட்டிலாகும் எண்ணம் இருக்கிறதா?

பலருக்கும் தெரியாவிட்டாலும், நான் அடிக்கடி இந்தியாவுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன். இந்தியா என்றால் என்னைப் பொறுத்தவரை மும்பை அல்லது பாலிவுட் மட்டும் அல்ல. நான் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி களுக்குச் செல்கிறேன். அங்குதான் இந்தியாவின் உண்மையான முகத்தைக் காண முடிகிறது, அப்பகுதிகளின் இயற்கையுடன், கலாசாரத்துடனும் என்னால் கரைந்துபோக முடிகிறது. நான் இந்தியாவைவிட்டு முற்றிலுமாகப் பிரிந்துபோய்விடவில்லை. அதே நேரம், 9 ஆண்டுகளைக் கழித் திருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் என்னுடைய இன்னொரு வீடு என்பதை மறுப்பதற்கில்லை. அமெரிக்க கலாசாரத்தில் கலந்துவிட்டவளாக நான் என்னைக் கருதுகிறேன். இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளின் சிறந்த விஷயங்களையும் நான் ரசிக்கிறேன்.

ஆலிவுட்டில் ஜாட் ரிட்லியின் அறிவியல் கற்பனை சாகசப் படமான ‘நீடில் இன் எ டைம்ஸ்டாக்’ கில் நடிக்கப் போகிறீர்கள். அது பற்றி...?

அது குறித்து நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். லெஸ்லி ஆடம் ஜூனியர், ஜான் ரிட்லி ஆகியோருடன் நான் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றப் போவதில் மிகவும் சந்தோஷம். ஜான் அற்புதமான அறிவுஜீவி. ‘12 அவர்ஸ் எ ஸ்லேவ்’ படத்துக்காக ஆஸ்கார் விருது பெற்றவர். 1970 காலகட்ட லண்டனில் நடப்பதாக அமைந்த ‘கெரில்லா’ என்ற ஆறு வார கால தொலைக்காட்சித் தொடரில் நாங்கள் இணைந்து பணிபுரிந்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் அத்தொடர் ஒளிபரப்பப்படவில்லை. தற்போதைய அறிவியல் கற்பனை படம், பழைய காலத்துக்குப் போவது மாதிரி அமைந்தது. ஆனால் அதன் மையக் கதை, இன்றைக்கும் பொருந்துவது. அது ஒரு இதயப்பூர்வமான காதல் கதை. அப்படிப்பட்ட காதல் படத்தில் நடிப்பதை நான் நேசிக்கிறேன்.

நிஜமாகவே உங்களால் முன்கூட்டியே காலத்தைக் கடந்து போக முடியும் என்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள்?

கால எந்திரத்தில் ஏறிப் பயணிக்க எனக்கும் ஆசைதான். அப்போது நம்மால் பல வித்தியாசமான விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால், கடந்த காலம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னால் காலத்தின் பின்னால் போக முடிந்தால்கூட நான் முன்பு செய்த எதையும் மாற்ற முயல மாட்டேன். காரணம், நான் செய்த தவறுகளாலும்தான் வளர்ந்தேன். ஆனால் காலத்தின் முன்னால் போக முடிந்தால் சில விஷயங்களை மாற்ற விரும்புவேன். இப்போதைக்கு, ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்று இந்தியாவில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் நம் மனோபாவம் மாற வேண்டும்.

மனோபாவம் பற்றிப் பேசும்போது, அமெரிக்காவில் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து பல பெண்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், பல பெரிய மனிதர்களின் முகமூடிகள் கிழிந்திருக்கின்றன. ஆனால் இன்னும் இந்தியாவில் இதுதொடர்பாக வெளிப்படையாகப் பேச தயக்கம் நிலவுகிறதே?

அமெரிக்காவில் இது வெற்றி பெற்றதற்குக் காரணம், அங்கு ஒட்டுமொத்தக் குரலாக ஒலிப்பதுதான். அங்கே பல பெண்கள் வெளியே வந்து தைரியமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிட்டுகிறது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் அப்பெண்களின் கதைகளை விரிவாக எழுதுகிறார்கள். அது மாதிரியான, நாட்டை உலுக்கும் விஷயத்தை வெளிப்படுத்த இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று நான் நினைக்கிறேன். அது எளிதான விஷயம் இல்லை. இங்கே பாதிக்கப்பட்ட பெண்கள்கூட தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள விரும்புகிறார்கள், தங்கள் குரல் ஊடகத்தில் சரியாக வெளிப்படும் என்றால்தான் வாய்திறக்க முன்வருகிறார்கள். தங்கள் மீது ஏதாவது முத்திரை குத்தப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள். இங்கு பொது ஆதரவு கிடைப்பதில்லை என்பதால்தான் பெண்கள் பேசத் தயங்கும் நிலை உள்ளது. ஆனால் பெண்கள் மீது அவதூறு பரப்புவது வளர்ந்த மேற்கத்திய நாடுகளிலும் உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ன ஒன்று, அங்கு அதைக் கொஞ்சம் மறைத்துச் செய்வார்கள், இங்கு வெளிப்படையாகச் செய்கிறார்கள்.

உதாரணமாக நீங்கள் எதைச் சொல்ல விரும்புகிறீர்கள்?

செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற 9 மாதங்களுக்குப் பிறகு, உடம்போடு ஒட்டிய கருப்பு ஆடை அணிந்தபடி பிரெஞ்சு ஓபனில் ஆடியபோது அவர் மீது எழுந்த விமர் சனங்கள் ஞாபகமிருக்கிறது அல்லவா? உடம்பில் எந்த இடத்திலும் ரத்தம் உறையாமல் தடுக்க அவர் அந்த ஆடையை அணிந்தார். ஆனால் செரீனா விளையாட்டு விதியையே மீறிவிட்டார் என்று கூக்குரல் எழுப்பினார்களே? அப்படி என்ன பெரிய விதி? ஒரு பெண் அநாகரிகமில்லாமல், தனக்குப் பிடித்த உடையை அணிவதை யார் தடுப்பது? அவர் தனது விளையாட்டுக்கு ஏற்ற வசதியான ஆடையை அணிந்தார். அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என எனக்குப் புரியவில்லை.

நீங்கள் ‘லவ்’ என்ற வார்த்தையை நேசிப்பதாகக் கூறி யிருக்கிறீர்கள். நாங்கள் சில புகைப்படங்களைப் பார்த்தபோது, உங்களுக்குள்ளும் ‘லவ்’ மலர்ந்திருப்பது போலத் தோன்றுகிறதே?

ஆகா... (சிரிக்கிறார்). நீங்கள் எந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கும் படத்தைத்தான் நீங்களும் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சொல்வது உண்மைதான்!

Next Story