பிரபல பெண் டைரக்டர் மரணம்


பிரபல பெண் டைரக்டர்  மரணம்
x
தினத்தந்தி 23 Sep 2018 11:00 PM GMT (Updated: 23 Sep 2018 4:45 PM GMT)

பிரபல இந்தி பட டைரக்டர் கல்பனா லட்சுமி. இவர் முன்னணி டைரக்டரான ஷியாம் பெனகலிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் டைரக்டரானவர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை இயக்கி கவனம் பெற்றார். கல்பனா லட்சுமி இயக்கிய ஏக்பல், டாமன், ருடாலி, சிங்காரி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

ருடாலி படத்தில் ராஜ் பப்பர்– டிம்பிள் கபாடியா நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருந்தார். ருடாலி படம் சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கல்பனா லட்சுமி இயக்கிய கடைசி படம்தான் சிங்காரி.

இதில் மிதுன் சக்கரவர்த்தி, சுஷ்மிதா சென் நடித்து இருந்தனர். 2006–ல் திரைக்கு வந்த இந்த படம் தி பிராஸ்டிடியூட் என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. கல்பனா லட்சுமிக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று அவரது உடல் நிலை மோசமானது.

இதனால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. கல்பனா லட்சுமி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்தி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story