சமரசம் இல்லை - அவதூறு வழக்கு : பாக்யராஜுடன் விசு மீண்டும் மோதல்


சமரசம் இல்லை - அவதூறு வழக்கு : பாக்யராஜுடன் விசு மீண்டும் மோதல்
x
தினத்தந்தி 23 Sep 2018 11:15 PM GMT (Updated: 23 Sep 2018 5:18 PM GMT)

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் பாக்யராஜ்.

முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன் ஆகியோர் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சங்கத்தின் அறக்கட்டளை பணம் ரூ.37 லட்சத்தை கையாடல் செய்து விட்டதாக  பாக்யராஜ்  புகார் அளித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

பணத்தை கையாடல் செய்யவில்லை என்று அமெரிக்காவில் இருந்து விசு விளக்கம் அளித்து இருந்தார். இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைக்கவும் முயற்சிகள் நடந்தன. தற்போது சென்னை திரும்பியுள்ள விசு, டைரக்டர் பாக்யராஜ் மீது குற்றம்சாட்டி கூறியிருப்பதாவது:–

‘‘பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவில் இருந்த நாட்களில் இந்தியா திரும்பியவுடன் அறக்கட்டளை வி‌ஷயத்தை பேசி சுமூகமாக முடிக்கிறேன் என்று ஆர்.கே.செல்வமணியிடம் சொன்னேன். அதற்குள் இங்கு எத்தனை குழப்பங்கள். வந்தவுடன்தானே ஒவ்வொன்றாக தெரிகிறது.

என் மீதும் பிறைசூடன், மதுமிதா ஆகியோர் மீதும் மோசடி, அபகரிப்பு, கூட்டு சதி, கையாடல் ஆகிய கேட்டாலே காதுகள் கூசக்கூடிய மூன்றாந்தர வார்த்தைகளை உள்ளடக்கிய புகார் ஒன்றை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அவர்கள் கொடுப்பார்களாம். எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் எங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்குமாம்.

ஆனால் வெட்கம், மானம், ரோ‌ஷம், சூடு, சொரணை எல்லாவற்றையும் துடைத்து போட்டு விட்டு, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வரவேண்டுமாம். இது என்ன அராஜக எதிர்பார்ப்பு? நாங்கள் வர மாட்டோம். ஆனால் கண்டிப்பாக கிரிமினல் வழக்குக்கான அவதூறு நோட்டீசு எங்கள் சார்பில் விரைவில் பாக்யராஜ், மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு வரும்.

 இது பயமுறுத்தல் அல்ல. பணிவான தகவல். படித்து பார்க்காமல் கையெழுத்து போடும் பழக்கமுள்ள ஒரு தலைமையிடம் நியாயம் கேட்கும் சட்ட ரீதியான அணுகு முறை.’’

இவ்வாறு விசு கூறியுள்ளார்.

Next Story