‘காக்கா முட்டை’ பாணியில் 2 சிறுவர்களை வைத்து மேலும் ஒரு புதிய படம், ‘பற பற பற’


‘காக்கா முட்டை’ பாணியில் 2 சிறுவர்களை வைத்து மேலும் ஒரு புதிய படம், ‘பற பற பற’
x
தினத்தந்தி 26 Sep 2018 10:15 PM GMT (Updated: 26 Sep 2018 5:13 PM GMT)

‘காக்கா முட்டை’ பாணியில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘பற பற பற’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

நடிகர் தனுஷ், டைரக்டர் வெற்றிமாறன் ஆகிய இருவரும் தயாரித்து, மணிகண்டன் டைரக்‌ஷனில், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி ஆகியோருடன் விக்னேஷ், ரமேஷ் என்ற 2 சிறுவர்களும் நடித்த படம், ‘காக்கா முட்டை.’ தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. 

அந்த படத்தைப்போல், அதே பாணியில் 2 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து, மேலும் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘பற பற பற’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில், காளி வெங்கட், மைம் கோபி, முனீஷ்காந்த், ராமதாஸ் ஆகியோருடன் மாஸ்டர் கோகுல், மாஸ்டர் மதன் என்ற 2 சிறுவர்களும் நடித்து இருக்கிறார்கள். பாரதி பாலா டைரக்டு செய்து இருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். நிகில் ஜெயின், ரஞ்சித் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் பாரதி பாலா கூறியதாவது:–

‘‘ஒரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில், 5–ம் வகுப்பு படிக்கும் வணங்காமுடி, பவளக்கொடி இருவரும் விவசாயி காளி வெங்கட்டின் மகன்கள். இருவருக்கும் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க வாய்ப்பு வருகிறது. படு சுட்டியாகவும், கிராமத்து இயல்போடும் இருக்கும் இருவரையும் சமாளிக்க பள்ளி நிர்வாகம் படாதபாடுபடுகிறது.

சிறுவர்களின் இயல்பும், சுதந்திரமும் பறிபோக–அடுத்தடுத்து பிரச்சினைகள் உருவாக ஆரம்பிக்கிறது. புதிதாக வரும் ஆசிரியர் மைம் கோபி, சிறுவர்கள் இருவரையும் எப்படி சமாளிக்கிறார்? தங்களுக்கு பிடிக்காத பள்ளியில் இருந்து சிறுவர்கள் இருவரும் வெளியேறினார்களா, இல்லையா? பள்ளி நிர்வாகம் ஏன் இவர்களுக்கு இலவச கல்வி தருகிறது? என்ற கேள்விகளுக்கு படத்தின் பின்பகுதி பதில் அளிக்கிறது.

குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ரசித்து பார்க்கும் கலகலப்பான படம், இது. சிறுவர்கள் இருவருக்கும் சென்னையில் இலவசமாக படிக்கும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது? என்பதில் அரசியல் இருக்கிறது. படத்தில் அது, ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில், காதல் காட்சிகள் இல்லை. டூயட் இல்லை.

ஒரு பள்ளிக்கூடம் எப்படியிருக்க வேண்டும்? ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படியிருக்க வேண்டும்? என்பதை படம் விளக்குகிறது. ‘பசங்க’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங் களின் பாணியில், ‘பற பற பற’ படத்தின் கதை அமைந்துள்ளது. மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முழு படத்தையும் முடித்து விட்டோம்.’’

இவ்வாறு டைரக்டர் பாரதி பாலா கூறினார்.

Next Story