சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்!: குருவியார் + "||" + Cinema question and answer ; kuruviyar

சினிமா கேள்வி பதில்!: குருவியார்

சினிமா கேள்வி பதில்!: குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
குருவியாரே, ‘வேலைக்காரன்’ படத்தில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்– நயன்தாரா ஜோடி, மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்வார்களா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

ராஜேஷ் எம். டைரக்டு செய்ய, ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயன்– நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது!


***

குருவியாரே, பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகிய இரண்டு பேரில் கதாநாயகிக்கு பொருத்தமானவர் யார், வில்லிக்கு பொருத்தமானவர் யார்? (எம்.கபார், நாங்குநேரி)

பூஜா குமார், மென்மையான–வசீகர தோற்றம் கொண்டவர். கதாநாயகியாக மட்டுமே பொருந்துவார். ஆண்ட்ரியா அடி தூள் பறத்துகிற வில்லி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துவார்!

***

குருவியாரே, திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கொடிகட்டி பறக்கிறாரே...எப்படி? (எம்.லோகநாதன், திருவண்ணாமலை)

திருமணத்துக்கு முன்பு இருந்ததை விட, திருமணத்துக்கு பிறகு சமந்தா மேலும் மெருகேறி இருப்பதால், புது பட வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வருகிறதாம்!

***

டைரக்டர் விக்ரமன் இயக்கிய முதல் படம் எது? அந்த படத்தின் கதாநாயகன் யார்? (சி.பி.துரை செந்தில்நாதன், குன்றத்தூர்)

விக்ரமன் இயக்கிய முதல் படம், ‘புது வசந்தம்.’ அந்த படத்தின் கதாநாயகன், முரளி!

***

நடிகர்கள் இப்போது அரசியலுக்கு வருவதில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

சினிமாவில் சேவை செய்தது போதும்...இனிமேல் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற ஆர்வம்தான் காரணம்!

***

நகைச்சுவை நடிகர் சூரிக்கு கதாநாயகன் ஆசை வந்திருக்கிறதா... இல்லையா? (டி.எம்.சம்பத்ராஜ், ஊத்துக்குளி)

சூரியை தேடி நிறைய கதாநாயகன் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். என்றாலும், அவருக்கு அந்த ஆசை இதுவரை வரவில்லை என்கிறார்!

***

குருவியாரே, இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் படங்கள் எவை? (ஏ.அனஸ் அகமது, சாத்தான்குளம்)

விஜய் நடித்த ‘சர்கார்,’ தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா,’ விஜய் ஆண்டனி நடித்த ‘திமிர் பிடிச்சவன்’ ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

***

குருவியாரே, கஸ்தூரிராஜா இயக்கிய ‘பாண்டி முனி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கதாநாயகி அருள் வந்து சாமி ஆடினாராமே... அது உண்மையா? (என்.சுரேஷ், குடியாத்தம்)

உண்மைதான். அந்த சமயத்தில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை என்கிறார், அந்த கதாநாயகி!

***

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் குத்தாட்டம் இருப்பது போல், வேறு எந்த மொழி படங்களிலும் அந்த ஆட்டம் வைக்கப்படுவதில்லையே... ஏன்? (கே.ராணி, செய்யாறு)

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களின் ரசிகர்கள்தான் குத்தாட்டத்தை ஆர்வமாக பார்க்கிறார்கள். அந்த ஆட்டத்துக்கு ஆதரவும் கொடுக்கிறார்கள். வேறு எந்த மொழி ரசிகரும் குத்தாட்டத்தை விரும்புவதில்லை!

***

தமிழ் பட இசையமைப் பாளர்களில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர் யார்? எவ்வளவு? (எஸ்.ராம்குமார், சேலம்)

ஏ.ஆர்.ரகுமான்! கோடிகளில் சம்பளம் வாங்குபவர், இவர்தான்!

***

குருவியாரே, சத்யராஜ், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரில், அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (பி.மோகன், தேனி)

வில்லனை விட, வில்லாதி வில்லன் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்!

***

“நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு. ஒன்று மனசாட்சி” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (டி.அரவிந்தராஜ், ஊட்டி)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘தியாகம்.’ பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வரும் டைரக்டர் மாரிமுத்து இயக்கிய முதல் படம் எது? அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்? (கே.செல்வி, செட்டிகுளம்)

மாரிமுத்து இயக்கிய முதல் படம், ‘கண்ணும் கண்ணும்.’ இவர் டைரக்டராவதற்கு முன்பு சீமானிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்!

***

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டே சின்னத்திரை யிலும் புகழ் பெற்று விளங்கும் நடிகை யார்? (ஜி.ஸ்ரீதர், மேட்டூர்)

ராதிகா சரத்குமார்!

***

ஸ்ரீதிவ்யா, சாயிஷா ஆகிய இரண்டு பேரில், முகவசீகரம் கொண்டவர் யார்? (ஆர்.புவன், பூந்தமல்லி)

ஸ்ரீதிவ்யா! சாயிஷா முகத்தில் மும்பை சாயல் அதிகம்!

***

குருவியாரே, மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லால் அறிமுகமான படம் எது, முதல் படத்தில் அவர் என்ன வேடத்தில் நடித்தார்? (வி.ராஜேந்திரன், ஈரோடு)

மோகன்லால் அறிமுகமான படம், ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்.’ (மலையாளம்) அந்த படத்தில் அவர்தான் வில்லன்!

***

‘நம்பர்-1’ இடத்தில் இருக்கும் நயன்தாராவை கீர்த்தி சுரேஷ் முந்தி விடுவார் என்று பேசப்படுகிறதே...அது நடக்குமா? (எச்.ரகமத்துல்லா, தஞ்சை)

நயன்தாராவுடன் ஒப்பிடும்போது, கீர்த்தி சுரேஷ் சின்ன குழந்தை. நயன்தாரா, ‘கனவுக்கன்னி’ என்ற அந்தஸ்தை கடந்து, இப்போது கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருடைய இடத்தை பிடிப்பது, அத்தனை சுலபமல்ல!

***

குருவியாரே, விக்னேஷ் சிவனுக்கு பிடித்த விளையாட்டு எது? (இரா.கோபால், கொடைக் கானல்)

நயன்தாராவிடம் கேளுங்கள், தெரியும்!

***

தமன்னா, ஒரு தமிழரை மணப்பாரா? (ஆர்.உதயகுமார், பெரியகுளம்)

மணந்தால், ஆச்சரியப் படுவதற்கில்லை!

***

குருவியாரே, விஜய் சேதுபதி எந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்? அவரை அறிமுகம் செய்த டைரக்டர் யார்? (ஜே.ஆண்டனி, பெருங்களத்தூர்)

விஜய் சேதுபதி அறிமுகமான படம், ‘தென் மேற்கு பருவ காற்று’ அவரை அறிமுகம் செய்த டைரக்டர், சீனுராமசாமி!

***