கேரளா வெள்ள பேரழிவு சினிமா படமாகிறது
கேரளாவின் வெள்ள பேரழிவு சினிமா படமாக உருவாக உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கன மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. பெருமளவில் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. அந்த வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா இப்போது மீண்டு வருகிறது.
கேரள வெள்ளத்தை மையப்படுத்தி புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘2403 பீட்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இடுக்கி அணை புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் டைரக்டு செய்கிறார்.
இவர் நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘ஓம் சாந்தி ஒஷானா’ என்ற மலையாள படத்தை இயக்கி பிரபலமானவர். ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார். ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் பிரபலமான ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் -நடிகைகள் பெயரை வெளியிடவில்லை.
படம் குறித்து இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது முகநூல் பக்கத்தில், “கேரளம் இதுபோல் ஒரு வெள்ள பேரழிவை இதுவரை பார்த்தது இல்லை. இதில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றிய மீனவர்கள், உணவு உறக்கம் இல்லாமல் மக்களுக்கு உதவிய ராணுவ வீரர்கள், சாதி, மதம் அரசியல் கடந்து சக மக்களுக்கு உதவிய மலையாளிகள், மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கிய பிற மாநில மக்கள் ஆகியோரை பற்றிய கதைதான் இந்த ‘2403 பீட்’ படம்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story