‘சர்கார்’ படக்குழு வெளியிட்ட விஜய்-ன் புதிய தோற்றம்
‘சர்கார்’ படத்தில் விஜய்-ன் புதிய தோற்றம் கொண்ட புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டது.
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வந்த துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
வெளிநாட்டில் தொழில் அதிபராக இருக்கும் விஜய் சென்னை திரும்பி அரசியலில் குதித்து முதல்-அமைச்சர் ஆவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் முதல் தோற்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி இருந்ததால் எதிர்ப்புகளும் கிளம்பின. அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து பட நிறுவனம் டுவிட்டரில் இருந்து புகைப்பிடிக்கும் படத்தை நீக்கியது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதன் பாடல்களை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை சென்னையில் விழா நடத்தி வெளியிடுகிறார்கள். இந்த விழாவில் ரசிகர்கள் திரள்கிறார்கள்.
இந்த நிலையில் சர்கார் படத்தில் நீல நிற கோட் சூட்டுடன் வரும் விஜய்யின் இன்னொரு புதிய புகைப்படத்தை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த படம் வைரலாகி உள்ளது. அத்துடன் சர்கார் கொண்டாட்டம் என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story