சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரானால், அவர் வேடத்துக்கு பொருத்தமானவர் யார்? (ப.வினோத், சென்னை–1)

திரிஷா இல்லைன்னா நயன்தாரா! இருவருமே ஜெயலலிதா வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துவார்கள்!

***

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக–இவ்வளவு பெரிய உயரத்துக்கு வருவோம் என்று பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நினைத்து பார்த்திருப்பாரா? (வி.முத்துமணி, சேலம்)

2007–ம் ஆண்டில், ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதும், அந்த படம் 2008–ல் வெளியான பிறகும் கூட, அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வருவார் என்று நினைத்துப் பார்க்கவில்லையாம்!

***

குருவியாரே, லட்சுமிமேனனை எங்கே காணோம்...? அவர் இப்போது எந்த மொழி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்? (ஆர்.சம்பத்குமார், குமணன்சாவடி)

அவருடைய தாய்மொழியான மலையாளத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்!

***

‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாகவும், ‘ஞானஒளி’ படத்தில் சிவாஜிக்கு மகளாகவும் நடித்த ஊர்வசி சாரதா இப்போது நடிக்கிறாரா, ஓய்வு எடுத்துக் கொண்டாரா? (எஸ்.அரவிந்த், குன்னூர்)

‘ஊர்வசி’ சாரதா ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, இந்திய திரையுலகின் பிரபல கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் யார், எத்தனை கோடிகள்? (டி.சசிகுமார், மதுராந்தகம்)

கங்கனா ரணாவத்! ரூ.18 கோடிகள்!

***

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவரில், வயதில் மூத்தவர் யார், அதிக தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர் யார்? (கே.சாமிநாதன், நாகர்கோவில்)

வயதில் மூத்தவர், கே.வி.மகாதேவன். அதிக தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர், எம்.எஸ்.விஸ்வநாதன்!

***

குருவியாரே, காஜல் அகர்வால் விளம்பர படங்களில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (ஜி.பிரவின்குமார், திருப்பூர்)

வியாபார ரீதியிலான ஒரு படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ, அந்த தொகையை கேட்கிறாராம்!

***

ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் கடைசியாக இணைந்து நடித்த படம் எது? இருவரையும் இணைத்தவர் யார்? (ஜே.பிரதீப், விருதுநகர்)

ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் கடைசியாக இணைந்து நடித்த படம், ‘படையப்பா.’ இருவரையும் இணைத்தவர், அந்த படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த்!

***

குருவியாரே, அமலாபால் ரொம்ப மெலிந்து காணப்படுகிறாரே...காரணம் என்ன? (பி.யுவராஜா, விளாத்திகுளம்)

அவர் இந்தி படத்தில் நடிக்கப் போவதாக கேள்வி. இந்தி பட ரசிகர்கள், மெலிந்த நாயகிகளையே விரும்பி ரசிப்பார்களாம்!

***

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ என்ன மாதிரியான கதை? (ஜார்ஜ், பாலக்காடு)

சாதி வெறியை கருவாக கொண்ட கதை. ஆணவ கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடிதான் கதைக்கு அடிப்படை!

***

குருவியாரே, அனுஷ்கா, இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பாராமே...இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? (ஏ.செபாஸ்டியன், ஜோலார்பேட்டை)

அனுஷ்கா எவ்வளவோ முயன்றும் அவர் குண்டு உடலை மெலிய வைக்க முடியவில்லையாம். அவர் குண்டாக தெரிவதால், இளம் கதாநாயகர்கள் பக்கத்தில் சேர்க்க மாட்டேன்கிறார்களாம்!

***

இப்போதெல்லாம் வரும் இளம் டைரக்டர்கள் மிக ஸ்டைலாக உடை அணிந்து கொண்டு வேலை செய்கிறார்களாமே...ஏன்? (இரா.தமிழ்செல்வன், சிவகாசி)

விக்னேஷ் சிவனுக்கு ஒரு நயன்தாரா கிடைத்தது போல், தங்களுக்கும் ஒரு தாரா கிடைக்க மாட்டாரா? என்ற எதிர்பார்ப்புதான் காரணமாம்!

***

குருவியாரே, வெற்றிமாறன் டைரக்‌ஷனில் அடுத்து வெளிவரும் படம் எது, அதில் கதாநாயகன்–கதாநாயகி யார்? (எஸ்.பிரபு, சின்ன சேலம்)

வெற்றி மாறன் டைரக்‌ஷனில் அடுத்து வெளிவரும் படம், ‘வட சென்னை.’ இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்!

***

ஜெயம் ரவி விரைவில் டைரக்டராக மாறப்போகிறாராமே...உண்மையா? (டி.கே.கோபிநாத், கோபிச்செட்டிப்பாளையம்)

ஜெயம் ரவி, ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருப்பது உண்மை. ஆனால், இப்போதைக்கு இல்லையாம். அவர் நடிக்க சம்மதித்து இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டுத்தான் டைரக்டராக மாறுவாராம்!

***

குருவியாரே, சிம்பு நடிக்கும் படங்களில் பெரும்பாலான ‘பஞ்ச்’ வசனங்களை அவரே எழுதி பேசுகிறாராமே, அப்படியா? (கே.ரவீந்திரன், கோவை)

‘‘இப்படி வைத்துக் கொள்ளலாமா...ஒரு வரியை சேர்த்து பேசலாமா?’’ என்று டைரக்டரிடம் சிம்பு ஆலோசனை கேட்பாராம். டைரக்டர் சம்மதித்தால் மட்டுமே சிம்பு சொந்தமாக ‘பஞ்ச்’ வசனங்களை பேசுவாராம்!

***

கீர்த்தி சுரேஷ் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (பி.ஆனந்த், சென்னை–87)

கீர்த்தி சுரேஷ் சம்பளமாக ஒரு கோடிக்கு குறையாமல் வாங்குகிறார்! விஜய்யுடன் அவர் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வெளிவந்தபின், மேலும் சம்பளத்தை கூட்ட முடிவு செய்து இருக்கிறாராம்!

***

குருவியாரே, ஸ்ரீதிவ்யா, தமிழ் பட உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வெற்றி பெறாமல் போய்விட்டதே...ஏன்? (கா.பிரசன்னா, திருப்பரங்குன்றம்)

இப்போது முன்னணியில் இருக்கும் கதாநாயகர்கள், குள்ளமான கதாநாயகிகளுடன் நடிப்பதை விரும்பவில்லையாம். ஸ்ரீதிவ்யாவிடம் உள்ள ஒரே குறை, அவருடைய குள்ளமான உடற்கட்டுத்தான். அவர் மட்டும் இரண்டு அல்லது மூன்று அங்குலம் உயரமாக இருந்திருந்தால், தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பேசப்பட்டு இருப்பார்!

***

ஹன்சிகா திகில் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கதை கேட்கிறாராமே...என்ன காரணம்? (பி.சரவணன், புதுச்சேரி)

அவர் நடித்த திகில் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அதுபோன்ற கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறாராம்!

***

குருவியாரே, பூர்ணா திடீரென்று தலைமுடியை மொட்டையடித்து கொள்கிறார். திடீரென்று ஆண்களைப்போல் ‘கிராப்’ வெட்டி கொள்கிறார். அவர் அடிக்கடி சிகையலங்காரத்தை மாற்றுவது, ஏன்? (ஏ.ஸ்டீபன் பால்ராஜ், தூத்துக்குடி)

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிகையலங்காரத்தை மாற்றிக் கொள்வது, குறிப்பாக மொட்டையடித்துக் கொள்வதற்கு துணிச்சல் வேண்டும். மற்ற கதாநாயகிகளுக்கு வராத துணிச்சல், பூர்ணாவுக்கு வந்திருப்பதற்காக அவரை பாராட்ட வேண்டும்!

***

திரிஷா திரையுலகுக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது. இந்த பதினைந்து வருடங்களில், அவர் எந்தெந்த படங்களுக்கு ஏகோபித்த பாராட்டுகளை வாங்கியிருக்கிறார்? (வி.முரளிராமன், ஈரோடு)

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்காக அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அதையடுத்து, ‘96’ படத்துக்கு பாராட்டுகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன!

***