நிஜத்தில் சாய்னா.. நிழலில் ஷ்ரத்தா..


நிஜத்தில் சாய்னா.. நிழலில் ஷ்ரத்தா..
x
தினத்தந்தி 7 Oct 2018 7:01 AM GMT (Updated: 7 Oct 2018 7:01 AM GMT)

பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாய்னாவாக நடிக்கிற உற்சாகப் பரபரப்பில் இருக்கிறார், ஷ்ரத்தா கபூர்.

பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாய்னாவாக நடிக்கிற உற்சாகப் பரபரப்பில் இருக்கிறார், ஷ்ரத்தா கபூர். பிரபல இந்தி நடிகையான அவர், சாய்னாவாக சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக ேபட்மிண்டன் விளையாட்டு பயிற்சிக்கும் செல்கிறார்.

‘‘நான் இப்போது தினமும் காலை 6 மணிக்கு பேட்மிண்டன் பயிற்சிக்குச் சென்றுவிடுகிறேன். எனக்கு பேட்மிண்டன் பயிற்சி அளிக்கிற ஈஷான் நக்வி இளைஞர்தான். ஆனால் அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். மிகச் சிறந்த பயிற்சியாளர் அவர்’’ என்கிறார்.

சாய்னா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர் பேட்மிண்டன் ஆடுவது போன்ற காட்சிகளை ஒருசில மாதங்களில் படமாக்கப் போகிறார்களாம். அதற்குள் தான் பேட்மிண்டனில் நன்றாகத் தேறிவிடுவேன் என்கிறார் ஷ்ரத்தா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்கிறார் இவர்.

பேட்மிண்டனை பற்றி உங்களுக்கு பொதுவாக என்ன தெரியும் என்று கேட்டால்,

‘‘கூடைப்பந்து போன்று கடினமான விளையாட்டு, பேட்மிண்டன். சாய்னா போல் தொழில்முறைரீதியாக பேட்மிண்டன் விளையாடுவது மிகவும் சவாலான விஷயம். பேட்மிண்டன் கோர்ட்டில் சாய்னா விளையாடுவதைப் பார்த்தால், அவர் ‘பாஸ்ட் பார்வர்டு மோடில்’ விளையாடுவது போலத் தெரியும். அது மிகவும் கடுமையான, களைப்புறச் செய்யும் விளையாட்டு. இந்தப் படத்தில் நடிப்பதற்காக நான் என்னை முழுமையாகக் கொடுத்துவிட்டேன்’’ என்று கூறுகிறார்.

இதற்கிடையில், சமூகக் கதை படமான ‘பாட்டி குல் மீட்டர் சாலு’வில் நடிப்பதற்கும் ஷ்ரத்தா தயாராகி வருகிறார். அதிகரிக்கும் மின் திருட்டு, உயர்ந்துவரும் மின் கட்டணம் குறித்த படமாம் இது. அதில் சிறு நகரத்தைச் சேர்ந்த நவுதி என்ற பெண்ணாக நடிக்கிறார் ஷ்ரத்தா. நவுதி ஒரு பேஷன் டிசைனர். எனவே, பேஷன் டிசைனிங்கின் அடிப்படை விஷயங்களையும் ஷ்ரத்தா கற்று அறிந்துகொண்டாராம். அதை பற்றியும் விலாவாரியாக பேசுகிறார், ஷ்ரத்தா.

‘‘நவுதி, வித்தியாசமாக ஆடை அணிபவள், தனது தலைமுடியில் ஆங்காங்கே நீல நிறத்தைத் தீட்டிக்கொள்பவள். தான் நன்றாக ஆடை அணிகிறோம் என்று அவள் நினைத்துக்கொண்டாலும், உண்மையில் அப்படி இல்லை. ஆனால் நவுதி தனது நம்பிக்கைகளில் உறுதியானவள், தனக்குப் பிடித்த வழியில் திடமாகச் செல்பவள்’’ என்று விரிவாக விளக்கிச் சொல்கிறார்.

இப்படத்தின் மூலம், நான்காண்டுகளுக்குப் பின் ஷாகித் கபூருடன் ஷ்ரத்தா இணைந்திருக்கிறார். இதற்கு முன் இருவரும் விஷால் பரத்வாஜின் ஹைதர் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். ஷாகித் போன்ற தெரிந்த முகத்துடன் நடிப்பது ஒருவகையில் வசதியானது என்கிறார் ஷ்ரத்தா.

‘‘நாம் ஏற்கனவே அறிந்தவருடன் இணைந்து நடிப்பது எப்போதுமே எளிது. பாலிவுட்டின் இளம் நடிகரான ஷாகித், நம்மிடம் உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர்’’ என்று பாராட்டுகிறார்.

சமீபத்திய படப்பிடிப்புத் தொடர்பான நினைவுகளைக் கிளறினால், உத்தரகாண்டின் டெக்ரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றது இனிமையான விஷயம் என்கிறார் ஷ்ரத்தா.

‘‘டெக்ரி போன்ற சிறுநகரங்களில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்பது எப்போதுமே எனக்குப் பிடிக்கும். காரணம் அங்கு எந்தப் பரபரப்பும் இருக்காது. அதுபோன்ற இடங்களில் நிலவும் அமைதி எல்லோருக்கும் ஆனந்தத்தைத் தரும். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நான் அங்கே மரங்களுக்கு இடையே நடைப் பயிற்சி செல்வேன்’’ என்று சொல்லும் ஷ்ரத்தா, தனது முந்தைய பட சம்பளப் பிரச்சினை எல்லாம் தீர்ந்ததில் மகிழ்ச்சி என்கிறார்.

மேற்கண்ட படங்களுக்கு இடையில், ஆந்திரா ஸ்டார் பிரபாசுடன் ‘சாகோ’ என்ற படத்திலும் ஷ்ரத்தா நடித்து வருகிறார். அதற்காக ஐதராபாத்திற்கும் சென்று வருகிறார். இது ஷ்ரத்தாவின் முதல் ‘ஆக்ஷன்’ படம் என்றாலும், இந்த சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

‘‘படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சண்டைப் பயிற்சியாளர் எனக்கு வேலை கொடுக்கிறார். தெலுங்கிலும், இந்தியிலும் அது தயாராகிறது. நான் இருமொழிப் படத்தில் நடிப்பதும் இதுதான் முதல் முறை. எனவே ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதைப் போல இருக்கிறது’’ என்கிறார்.

இவரது தாயார் சிவாங்கி மராத்தி ெமாழி பேசுபவர். அந்த பூர்வீகத் தொடர்புக்காக ஒரு மராத்திப் படத்திலும் நடிக்க விரும்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்துகிறார் ஷ்ரத்தா. இவர் தனது குடும்பத்துக்காக சமீபத்தில் கோவாவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். விடுமுறை நாட்களை இனி அங்கே செலவிட விரும்புகிறார். ஆனால் அந்த வீட்டை இதுவரை தான் நேரில் சென்று பார்க்கக்கூட இல்லை என்கிறார்.

‘‘இப்போதைக்கு, எனது அப்பா நடிகர் சக்திகபூர், அம்மா, அப்புறம் எனது சகோதரன் ஆகியோர்தான் அந்த வீடு தொடர்பான வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார். பல வேலைகள் ஷ்ரத்தாவை பல திசைகளில் இழுத்துக்கொண்டிருந்தாலும், தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கான விஷயங்களிலும் ஈடுபடுவதாகச் சொல்கிறார்.

‘‘சமீபகாலமாக நான் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். கீ போர்டு மூலம் அவற்றுக்கு இசை அமைப்பதிலும் ஆர்வம் காட்டுகிறேன். அவ்வப்போது, பேனாவால் கிறுக்கி டிசைன் செய்வதும் எனது பொழுதுபோக்கு’’ என்று கூறும் ஷ்ரத்தாவிடம் உங்களின் இதுபோன்ற படைப்புத்திறமைகளை பெரிய அளவில் வெளிப்படுத்தும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டால், இப்போதைக்கு நடிப்பில்தான் எனது முழுக் கவனமும் என்று சொல்கிறார்.

ஷ்ரத்தாவின் வாழ்வில் புகைப்படக் கலைஞர் ரோகன் ஸ்ரேஷ்தா நுழைந் திருப்பதாக வரும் தகவல்கள் உண்மையா எனக் கேட்டால் சீறிக்கொண்டு வருகிறது பதில்...

‘‘என்னைப் பிறருடன் இணைத்து வரும் இதுபோன்ற வதந்திகள் குறித்து நான் கவலைப்படுவதில்லை. நடிகர், நடிகையின் வாழ்வில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம். நடிப்பில் கவனம் செலுத்துவதிலேயே எனக்கு மகிழ்ச்சி. நான் எனது பணியையும் சினிமாவையும் மணந்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது வழக்கமான பதிலாக இருக்கும். அதனால் நான் எனது சொந்த வாழ்க்கை பற்றிப் பேச விரும்பவில்லை என்று மட்டும் சொல்கிறேன்.” என்று சூடாக முடிக்கிறார், ஷ்ரத்தா கபூர்.

Next Story