இந்திய சினிமா இணைத்த காதல் இது..


இந்திய சினிமா இணைத்த காதல் இது..
x
தினத்தந்தி 7 Oct 2018 7:23 AM GMT (Updated: 7 Oct 2018 7:23 AM GMT)

சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா தயாரிப்பை பற்றி கற்பதற்காக வந்தவர், அக்னி சர்மன்.

சுலோவோக்கியா நாட்டை சேர்ந்தவர் சிேமானா. சிறுவயதிலே இந்திய சினிமாக்களிடம் மனதை பறிகொடுத்த இவருக்கு, இந்தியாைவ பற்றியும் நிறைய தெரிந்துகொள்ள ஆசை. அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா தயாரிப்பை பற்றி கற்பதற்காக வந்தவர், அக்னி சர்மன். இவர் கேரளாவில் புகழ் பெற்ற கோவில் புரோகிதர்கள் குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா எடிட்டிங் கலையை பற்றி அக்னிசர்மனுக்கு பாடம் நடத்திய பிரபல எடிட்டர் லெனின், அது பற்றி கூடுதலாக கற்றுக்கொள்ள ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் பிலிம் அகாடமிக்கு செல்லுமாறு கூறினார்.

உலகப் புகழ் பெற்ற அந்த நிறுவனத்தில் சேர்ந்து அக்னிசர்மன் பயிற்சிபெற்றுக் கொண்டிருந்தபோது, இணையதளம் வழியாக சினிமாவை பற்றி அவருடன் கருத்து பரிமாறத் தொடங்கினார், சிமோனா. தொடர்ந்து பேசினார்கள். விவாதித்தார்கள். ஒருகட்டத்தில் அந்த கருத்து பரிமாற்றம் அவர்களுக்குள் காதலை உருவாக்கிவிட்டது. திருமணமும் செய்துகொண்டார்கள். அந்த திருமணத்தில் வித்தியாசமான சடங்கு சம்பிரதாயங்களும் அரங்கேறின.

கேரளாவில் திருவல்லா ஸ்ரீவல்லபா ஆலயம், ஆரன்மூளா பார்த்தசாரதி ஆலயம் உள்பட 800-க்கும் மேற்பட்ட கோவில்களில் தாந்திரீக பூைஜகள் செய்பவர்களின் பாரம்பரியத்தில் பிறந்தவர் அக்னி சர்மன். இவரது தந்தை காளிதாச பட்டாதிரிபாடு, தாயார் ஆஷா. தாந்திரீக பாரம்பரியத்தில் பிறந்த அக்னிசர்மன் பட்டா திரிபாடுவிடம் சிறுவயதிலேயே சினிமா ஆசை தொற்றிக்கொண்டது. பின்பு சினிமா இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற முடிவுக்கு வந் திருக்கிறார். அப்படி அவர் எடுத்த முடிவுதான் அவரை ஹங்கேரி சினிமா பயிற்சி மையத்தில்கொண்டு போய் சேர்த்தது.

உலகில் உள்ள எல்லா சினிமா பயிற்சி மையங்களும் வலைத்தளங்கள் மூலம் இணைந்திருக்கின்றன. உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களும் அதில் இணைந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். சினிமாவை கற்றுத் தேர்ந்தவர்கள் அவர் களோடு அவ்வப்போது கலந்துரையாடுவார்கள்.

சினிமாவை அளவுக்கு அதிகமாக நேசித்த சிமோனாவுக்கும் சினிமாவை பற்றி கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. அவர் சுலோவோக்கியாவில் உள்ள இன்டர்நேஷனல் பிலிம் அகாடமியில் சேர்ந்து திரைக்கதை எழுதுவதற்கும், எடிட்டிங் செய்வதற்கும் பயிற்சி பெற்றவர்்.

“இந்தியாவின் கலை, கலாசாரம், இலக்கியம், சினிமா போன்ற அனைத்துமே என்னை ஆச்சரியப்படுத்தியது. அதனால் நான் அது பற்றி அக்னி சர்மனுடன் நிறைய விவாதித்தேன். நான் சுலோவோக்கியாவின் தலைநகரத்தில் வசிக்கிறேன். எனது தந்தை வாட்மர் அரசு வேலை பார்க்கிறார். தாயார் சில்வியா மனோதத்துவ நிபுணர். காதல்வசப்பட்ட நாங்கள் எங்கள் நாட்டில் உள்ள உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த நினைத்தோம். ஆனால் கேரளாவில் ஏற்பட்ட திடீர் மழையால் எங்கள் திட்டம் முழுமை பெறவில்லை. ஆகம முறைப்படி திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டோம்” என்கிறார், சிமோனா.

“ஆச்சாரமிக்க பாரம்பரிய புரோகித குடும்பத்தை நான் சார்ந்திருந்தாலும், நாங்கள் எல்லா தரப்பு மக்களிடமும் நெருக்கமான நட்புறவு வைத் திருக்கிறோம். அதன் மூலமாக கலாசார பிணைப்பு எங்களிடம் இருப்பதால், எனது காதல் திருமணத்திற்கு எங்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை” என்கிறார், அக்னிசர்மன். கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த பிரமுகரும் இவர்களது மணவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

தாந்திரீக பாரம்பரிய முறைப்படி சிமோனாவை முதலில் அக்னிசர்மனின் நம்பூதிரி குடும்பம் தத் தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களை சார்ந்த ஒரு குடும்பத்தினர் அப்போது சிமோனாவை தங்கள் மகளாக தத்தெடுத்தனர். தத்தெடுத்த நம்பூதிரி குடும்பத்தினர் சிமோனாவுக்கு துளசி என்ற புதிய பெயரையும் சூட்டினார்கள்.

புதிய பெயர் சூட்டியது பற்றி சிமோனா, “எனக்காக அவர்கள் பல பெயர்களை சொன்னார்கள். நான் எல்லா பெயர்களையும் கேட்டுவிட்டு அதில் இருந்து துளசி என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். துளசி செடி மீது எனக்கு இருந்த ஈடுபாட்டால் அந்த பெயரை தேர்ந் ெதடுத்தேன். இந்தியா வருவதற்கு முன்பே நான் துளசி செடியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அது உலகிலே சிறந்த அரிய வகை மூலிகை. நான் துளசி என்று பெயர் சூட்டிக்கொண்டாலும் என்னை பலரும் துளசி என்று பெயர் கூறி அழைப்பதில்லை” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

சிமோனா திருமணத்திற்கு முன்பே அக்னி சர்மனின் குடும்பத்தினருக்கு பிரியமான வராகிவிட்டார். அவரது சகோதரி சாவித்ரி சிமோனாவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார்.

இந்த அபூர்வ திருமணம் பற்றி அக்னி சர்மன் வித்தியாசமான விளக்கம் தருகிறார்..

“எங்களை சினிமாதான் இணைத்தது. அதனால் நாங்கள் சினிமாக்காரர்களாகவே கொஞ்ச காலம் இருந்துவிடப்போகிறோம். அடுத்து நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சினிமாவே தீர்மானிக்கட்டும். நாங்கள் தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதற்கான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அது சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படமாக இருக்கும். சினிமா என்பது வியாபாரம் மட்டுமல்ல அது சரித்திரத்தையும், கலாசாரத்தையும் உள்ளடக்கியது என்பது என் கருத்து” என்கிறார்.

“இந்தியாவில்தான் சினிமாவின் செயல்பாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த வேகத்தை நான் எந்த ஐரோப்பிய நாடுகளிலும் பார்த்ததில்லை. என்னை பார்த்து பலரும், ஐரோப்பிய கலாசாரத்தை பின்பற்றிய உங்களால் எப்படி இந்திய கலாசாரத்திற்கு ஒத்துப்போக முடியும்? என்று கேட்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இப்போது அமைதிப் புரட்சி ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் அசைவ உணவில் இருந்து விடுபட்டு சைவ உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக ‘கிரீன் மூவ்மென்ட்’ என்ற அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சிறு வயதில் இருந்தே நானும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பிராணிகளை கொல்லக்கூடாது. கொன்றதை தின்னக்கூடாது என்ற கோஷத்தை நான் பள்ளி வாழ்க்கை காலத்திலே எழுப்பத் தொடங்கிவிட்டேன். எனக்கு சுலோவோக்கியா நாட்டு மொழியும், ஆங்கிலமும் தெரியும். இனி மலையாளத்தையும் கற்றுக்கொள்வேன்” என்கிறார்.

இந்த புது மணத்தம்பதிகள் இணைந்து உருவாக்கும் புதிய தமிழ்ப் படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Next Story