மலைப்பாம்பை துன்புறுத்துவதா? காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு


மலைப்பாம்பை துன்புறுத்துவதா? காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 8 Oct 2018 5:24 PM GMT)

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகை காஜல் அகர்வால் விடுமுறையை கழிக்க குடும்பத்தாருடன் தாய்லாந்து சென்றபோது ஒரு மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் வாலையும் தலையையும் கைகளால் பிடித்தபடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். வீடியோவுக்கு ‘என்ன ஒரு அனுபவம்’ என்று தலைப்பும் வைத்தார். 

அந்த வீடியோ அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர்கள், ‘‘உங்கள் செயல் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஊக்குவிப்பது போல் உள்ளது’’ என்று கண்டித்து உள்ளனர். காஜல் அகர்வால் ‘பீட்டா’வில் இணைந்து விலங்குகள் பாதுகாப்பு பிரசாரங்களில் ஈடுபட்டவர். அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை என்கிறார்கள் அந்த அமைப்பினர். 

ஐதராபாத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் பாயல் குரானா கூறும்போது, ‘‘பாம்புகளை கூண்டுக்குள் அடைத்து வைப்பதால் தொல்லைகளை அனுபவிக்கின்றன. சுதந்திரமாக இருக்க வேண்டிய பாம்புகளை மனிதர்கள் பொழுதுபோக்கு பொருளாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. 

காஜல் அகர்வால் பாம்புடன் இருக்கும் வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்களும் அதேபோல் பாம்பை துன்புறுத்த நினைப்பார்கள். பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் செயலில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார். பாம்பை தோளில் போட்டது சர்ச்சையானதால் அதிர்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால். ஏற்கனவே நடிகை திரிஷாவும் வெளிநாட்டு ரிசார்ட்டில் டால்பினுக்கு முத்தமிடும் படத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story