காசி கோவிலில் ரஜினிகாந்த் வழிபாடு


காசி கோவிலில் ரஜினிகாந்த் வழிபாடு
x
தினத்தந்தி 10 Oct 2018 11:30 PM GMT (Updated: 10 Oct 2018 7:10 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் சசிகுமார், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் ஆகியோரும் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன் பகுதிகளில் நடந்தது. இப்போது லக்னோவில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த மாதம் இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி வீடியோவும் வைரலானது.

விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் ஓடும் காட்சிகளும் வெளியானது. இதனால் படப்பிடிப்பு அரங்கில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அடையாள அட்டையுடன் வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். ரஜினிகாந்தின் இரண்டு தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ‘பேட்ட’ படத்துக்காக வைத்துள்ள முறுக்கு மீசை தோற்றத்திலேயே சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள நாகலிங்கத்துக்கு ரஜினிகாந்த் பால் ஊற்றி வழிபட்டார்.

ரஜினிகாந்த் கோவிலுக்கு வந்த செய்தி பரவி கூட்டம் அலைமோதியது. அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். பலத்த பாதுகாப்புடன் ரஜினிகாந்த் கோவிலில் இருந்து வெளியேறினார்.

நிருபர்களிடம், “காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவதற்காக வந்தேன். எனது பயணம் சிறப்பாக இருக்கிறது” என்று கூறிவிட்டு சென்றார்.

Next Story