‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் பற்றிய ‘மெரினா புரட்சி’ படத்துக்கு அனுமதி மறுப்பு தணிக்கை குழு நடவடிக்கை


‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் பற்றிய ‘மெரினா புரட்சி’ படத்துக்கு அனுமதி மறுப்பு தணிக்கை குழு நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 7:44 PM GMT)

‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் பற்றிய ‘மெரினா புரட்சி’ படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.

சென்னை,

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை மையப்படுத்தி, ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில், ஒரு புலனாய்வு படம் தயாரானது. போராட்டத்தில் பங்கேற்ற நவீன், சுருதி ஆகிய இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள். எம்.எஸ்.ராஜ் டைரக்டு செய்தார்.

படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

அனுமதி மறுப்பு

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், அதை திரையிடுவதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். மெரினா போராட்டத்துக்கு எதிராக ஒரு முன்னாள் மத்திய மந்திரி, ஒரு பிரபல நடிகை, தற்போது பதவியில் இருக்கும் ஒரு மத்திய மந்திரி, ஒரு ‘எம்.பி.’ ஆகியோர் இருப்பதாக படத்தில் சொல்லப்பட்டிருப்பதாகவும், அதனால்தான் படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதிதர மறுத்து விட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ‘மெரினா புரட்சி’ படம் மறு தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. மறுதணிக்கையில் அனுமதி கிடைத்து விடும் என்று நம்புவதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். மறுதணிக்கை குழுவினர் இன்னும் ஒரு வாரத்தில் படத்தை பார்ப்பதாக கூறியிருக்கிறார்கள்” என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

Next Story