ரூ.1,000 கோடியில் ‘மகாபாரதம்’ படமாவதில் சிக்கல்


ரூ.1,000 கோடியில் ‘மகாபாரதம்’ படமாவதில் சிக்கல்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 12 Oct 2018 7:11 PM GMT)

மகாபாரதம் கதை ரூ.1,000 கோடி செலவில் படமாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது படமாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

பிரபல மலையாள இயக்குனரும், எழுத்தாளருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மகாபாரதம் கதையை தழுவி எழுதிய ரெண்டாமூழம் நாவலை மையமாக வைத்து மகாபாரதம் கதையை ரூ.1,000 கோடி செலவில் படமாக்கப் போவதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. இதில் பீமனாக நடிக்க மோகன்லாலை தேர்வு செய்தனர். கர்ணன் வேடத்துக்கு மம்முட்டியிடம் பேசி வந்தனர்.

மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல தமிழ் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஸ்ரீகுமார் மேனன் இயக்குவார் என்றும், தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 2 பாகமாக தயாராகும் என்றும் தெரிவித்தனர். 

இந்த படம் இந்தியாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட முதல் படமாக கருதப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் கதையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாசுதேவன் நாயர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அவர் கூறும்போது ‘‘மகாபாரதம் கதையை மூன்று வருடங்களுக்குள் படமாக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். ஆனால் 4 வருடங்கள் ஆகியும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் கதையை என்னிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும். தவறினால் கோர்ட்டுக்கு செல்வேன்’’ என்றார்.

இதனால் மகாபாரதம் படமாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறும்போது  வேறு பட வேலையில் இருந்ததால் மகாபாரதம் படமாவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கண்டிப்பாக படப்பிடிப்பு தொடங்கும். வாசுதேவன் நாயரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்’’ என்றார்.

Next Story