சினிமா செய்திகள்

கதாபாத்திரத் தேர்வில் வெற்றி காணும் பார்வதி + "||" + Parvathi is the winner of the character selection

கதாபாத்திரத் தேர்வில் வெற்றி காணும் பார்வதி

கதாபாத்திரத் தேர்வில் வெற்றி காணும் பார்வதி
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் பாலிவுட்டில் வித்யாபாலன், தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, பார்வதி ஆகியோர் முக்கியமானவர்கள்.
இவர்களில் வித்யாபாலன், நயன்தாரா இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தும் கமர்ஷியல் படங்களிலும் நடித்து வருகிறார்கள். ஆனால் அவர்களில் இருந்து பார்வதி சற்று வித்தியாசமானவர்.

‘தான் ஏற்று நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களால் பேசப்பட வேண்டும்’ என்று நினைத்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறாரா? அல்லது அவர் பொறுமையாக காத்திருந்து, தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களால் பேசப்படுகிறதா? தெரியவில்லை. கொஞ்சம் மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால், தன் மனதுக்கு சரி என்று தோன்றிவிட்டால், அது எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதை ஏற்று நடிக்க தயங்காதவர் பார்வதி. அதனால்தான் அவர் நடித்த படங்களில் பலவற்றில் இரண்டாம் கதாநாயகியாக அல்லது படத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்றும் கதாபாத்திரங்களைக் கூட ஏற்று நடித்திருப்பார்.

சினிமாவுக்கு வந்து ஒரு படம் பெரிய வெற்றியைப் பெற்று விட்டாலே வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 அல்லது 5-க்கும் மேற்பட்ட படங்களை நடித்துத் தள்ளி விடும் நடிகைகளுக்கு மத்தியில், மலையாளத்தில் இதுநாள் வரை தவிர்க்க முடியாத முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பார்வதி, ஆண்டுக்கு ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு என்ற ரீதியிலேயே சினிமாவை ஒப்புக்கொள்வதில் இருந்தே, அவரது கவனமான கதை மற்றும் கதாபாத்திரத் தேடலை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

பார்வதி சினிமாவுக்குள் நுழைந்த அதே காலகட்டத்தில் சினிமாவில் அடியெடுத்து வைத்த பல நாயகிகள், இன்று சுமார் 40 அல்லது 50 படங்களின் எண்ணிக்கையில் நடித்து முடித்திருக்கும் அதே வேளையில், பார்வதி கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 21 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் கதாநாயகியாக வெறும் 10 படங்களே. ஆனாலும் அவர் ஏற்று நடித்த அழுத்தமான, சுவாரசியமான கதாபாத்திரங்களின் மூலமாக கமர்ஷியல் நடிகைகளுக்கு இல்லாத தனி மரியாதையும், கதாபாத்திரங்களுக்கான நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் என்பதே பார்வதியின் மிகப்பெரிய வெற்றி.

பார்வதியின் நடிப்பில் தமிழில் வெளியான ‘பூ’, ‘மரியான்’, மலையாளத்தில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘சார்லி’, ‘டேக் ஆப்’ போன்ற படங்கள் பார்வதியை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ‘டேக் ஆப்’ படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

இப்போதும் கூட பார்வதியின் கையில் 4 படங்கள் இருக்கின்றன. இவற்றில் மலையாள மொழிப் படங்களான ‘வைரஸ்’, ‘ஆட்டோரிக்‌ஷாக்காரன்ட பாரியா’ போன்ற படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதில் ‘வைரஸ்’ என்ற திரைப்படம் மழை வெள்ளத்திற்கு முன்பாக கேரளாவை உலுக்கிய ‘நிபா வைரஸ்’ பற்றிய உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது. வவ்வால்களால் உருவாகும் வைரஸ் என்று சொல்லப்பட்ட நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் சிலர் உயிரிழந்த சம்பவம் அனைவரும் அறிந்தது தான். அதனை மையமாக வைத்துத் தான் இந்தப் படம் உருவாகிறதாம்.

இந்தப் படத்தை சமீபத்தில் ‘மாயநதி’ என்ற மெகாஹிட் படத்தைக் கொடுத்த ஆசிப் அபு இயக்குகிறார் என்பது ஒரு புறம் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தாலும், ரேவதி, ஆசிப் அலி, பார்வதி, ரீமா கல்லிங்கல், டொவினோ தாமஸ், காளிதாஸ் ஜெயராம், ரம்யா நம்பீசன், செம்பியன் வினோத், திலீஷ் போத்தன், சோபின் ஷாகிர் என ஒரு நட்சத்திர பட்டாளத்தை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்து, ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி விட்டிருக்கிறார்கள். கதையும், கதாபாத்திரமும் தன்னை கவர்ந்து விட்டால், தன்னுடன் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பார்வதி நினைவில் கொள்வதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

‘ஆட்டோரிக்‌ஷாக்காரன்ட பாரியா’ திரைப்படத்தில் முதன் முறையாக பிஜூமேனனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார், பார்வதி. இந்தப் படத்தில் ஆட்டோ டிரைவராக பிஜூமேனனும், அவரது மனைவியாக பார்வதியும் நடிக்கிறார்கள். படத்தின் முழுக் கதையையும் சுமக்கும் கதாபாத்திரம் பார்வதியினுடையது என்பதை படத்தின் பெயரே சொல்லிவிட்ட நிலையில், அந்தக் கதாபாத்திரப் படைப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை படம் வெளிவந்த பிறகுதான் நாம் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

இது தவிர மலையாளத்தில் முன்னணி திரைக்கதை ஆசிரியர்களாக திகழும் பாபி-சஞ்சய் ஆகியோரது எழுத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம் பார்வதி. இது ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது. ‘டிராபிக்’, ‘ஆயாளும் ஞானும் தம்மில்’, ‘மும்பை போலீஸ்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி-சஞ்சய் ஆகியோரின் கதை என்பதால் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில் இருக்கும் இந்தப் படத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறாராம் பார்வதி. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் மனு அசோக் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஆசிப் அலி, டொவினோ தாமஸ் ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டிற்கு ஒரு படமோ அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒரு படமோ நடித்தாலும் சரி.. பெண்களை மையப்படுத்தும் அழுத்தம் மிகுந்த கதாபாத்திரங்கள் பார்வதியைத் தேடி வந்து கொண்டேதான் இருக்கும்.