மீடூ விவகாரம்: வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு; ரூ.1 இழப்பீடு கோரியுள்ளார் ஆலோக் நாத்


மீடூ விவகாரம்:  வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு; ரூ.1 இழப்பீடு கோரியுள்ளார் ஆலோக் நாத்
x
தினத்தந்தி 15 Oct 2018 12:39 PM GMT (Updated: 15 Oct 2018 12:39 PM GMT)

பெண் இயக்குநர் வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் ஆலோக் நாத் ரூ.1 இழப்பீடு கோரியுள்ளார்.

புதுடெல்லி,

பெண் எழுத்தாளர் மற்றும் இயக்குநரான வின்டா நந்தா மீது பிரபல நடிகர் ஆலோக் நாத் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  தொடர்ந்து தனக்கு ரூ.1 இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபல நடிகரான ஆலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், எழுத்தாளருமான வின்டா நந்தா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வின்டா முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு பார்ட்டிக்கு என்னை ஒருவர் அழைத்தார். அவரின் மனைவியான என் நெருங்கிய தோழி ஊரில் இல்லை. ஆனால் தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள் அடிக்கடி சந்திப்பதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பார்ட்டிக்கு சென்ற இடத்தில் எனக்கு மதுவில் ஏதோ கலந்து விட்டார்கள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இரவு 2 மணிக்கு அந்த வீட்டில் இருந்து கிளம்பினேன். என்னை யாருமே டிராப் செய்யவில்லை. அது எனக்கு வித்தியாசமாக இருந்தது.

இரவு நேரத்தில் ஆள் இல்லாத தெருவில் நடந்தபோது ஒருவர் தன் காரில் வந்து என்னை வீட்டில் டிராப் செய்வதாக கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். அதன் பிறகு நடந்தது எனக்கு சரியாக நினைவில் இல்லை. என் வாயில் மது ஊற்றப்பட்டது தெரிந்தது. என்னை ஏதோ செய்கிறார் என்று தெரிந்தது. மறுநாள் மதியம் கண் விழித்தபோது உடம்பு வலித்தது. என்னை பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என் வீட்டில் வைத்தே என்னை கஷ்டப்படுத்தியிருக்கிறார். என்னால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை என அதில் தெரிவித்து உள்ளார்.

இவர் தயாரித்து, எழுதிய டி.வி.யில் நம்பர் ஒன் நிகழ்ச்சியான தாரா சீரியலில் நடித்த நவ்னீத் நிஷான் என்பவரும் வின்டாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆலோக் நாத் மீது நடிகை சந்தியா மிருதுல் மற்றும் தீபிகா அமீன் உள்ளிட்டோரும் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து கடந்த வாரம் சமூக வலைதளத்தில் அதனை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வின்டா நந்தாவுக்கு எதிராக நடிகர் ஆலோக் நாத் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  வின்டா எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளதுடன், ரூ.1 இழப்பீடாக தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Next Story