நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:59 PM GMT (Updated: 16 Oct 2018 10:59 PM GMT)

தனக்கு தொலைபேசி மூலம் தொடர் மிரட்டல் வருவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் போலீஸ் இணை கமிஷனரிடம் புகார் அளித்தார்.

அம்பத்தூர்,

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில், 2,500 வீடுகளை கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வசித்து வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பானது 2015-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு அதன் பிறகே அங்கு ஒவ்வொரு குடும்பமாக குடியேறின. ஆனால் 2013-ம் ஆண்டே அந்த அடுக்குமாடி குடியிருப்பில், ‘குடியிருப்போர் நல சங்கம்’ தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

குடியிருப்பு கட்டி முடிக்கும் முன்னரே உரிய ஆலோசனை இன்றியும், சட்டத்திற்கு புறம்பாகவும் அமைக்கப்பட்ட இந்த குடியிருப்போர் நலசங்கம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

எனவே அதன் நடவடிக்கைகள் குறித்து, அங்கு குடியிருந்து வரும் நடிகை லட்சுமி ராம கிருஷ்ணனும் மற்றும் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், குடியிருப்போர் நலசங்கம் குறித்து கேள்வி எழுப்புவதால் மர்ம ஆசாமிகளிடம் இருந்து தனக்கு தொடர் மிரட்டல் வருவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரியிடம் நேற்று புகார் அளித்தார். இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

குடியிருப்போர் நலசங்கம் விவகாரம் குறித்து நான் பேசுவதால், கடந்த 6 மாத காலமாக சிலர் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்களிலும் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள், என்னை தொழில் ரீதியாக கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். குடியிருப்போர் நலசங்கம் குறித்து வாய் திறக்கக்கூடாது என மிரட்டுகின்றனர். எனது புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக இணை கமிஷனர் உறுதி அளித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ‘மீ டூ’ விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “ ‘மீ டூ’ தற்போது பிரபலமாகி வருகிறது. பத்திரிகை மற்றும் செய்தி சேனல்கள் ‘மீ டூ’ தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகின்றன. பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் குறித்து போலீஸ் துறையிடம் புகார் அளிக்க முன்வரவேண்டும்” என்றார்.

Next Story