பாலியல்: நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம் - நடிகை தனுஸ்ரீ தத்தா


பாலியல்: நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம் - நடிகை தனுஸ்ரீ தத்தா
x
தினத்தந்தி 21 Oct 2018 2:30 AM GMT (Updated: 19 Oct 2018 1:29 AM GMT)

இந்தியா எங்கும் ‘மீ டூ’ புயல் அடித்துக்கொண்டிருக்கிறது. தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து பெண்கள் பலரும் வாய்திறக்க, அனேக பிரபலங்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

ந்தியா எங்கும் ‘மீ டூ’ புயல் அடித்துக்கொண்டிருக்கிறது. தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து பெண்கள் பலரும் வாய்திறக்க, அனேக பிரபலங்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். இந்தப் புயலைத் தொடங்கிவைத்தவர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவிடம் பேசியபோது அவர் நிறைய புதிய விஷயங்களை கொட்டினார். அவரது பேட்டி:

நீங்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிந்தைய இந்த பத்தாண்டு காலம் எப்படி இருந்தது?

ரொம்பவே கடினமாக இருந்தது. அந்தச் சம்பவம் என் நினைவுக்கு வரும்போதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அதன் தாக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது. நானும் அமைதியாக இருக்க பழகிவிட்டேன். எனக்கு பாலியல் அத்துமீறலால் மட்டும் கோபமில்லை. அதனால் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட கஷ்டம், மனஉளைச்சல் மிக அதிகம். ஆனால் இவ்வளவு நடந்தும், இன்றும் ஒன்றும் நடவாதது போலத்தான் நானா படேகர் காட்டிக்கொள்கிறார். அதற்கு மேலாக, ஊடகங்களின் முன் நின்று, பொய்கள் மேல் பொய்களாக உமிழ்கிறார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, ராகேஷ் சாரங், சமீ சித்திக்கி என்ற நான்கு பேரும், ஒட்டுமொத்த நவநிர்மாண் சேனாவும் ஒரு தனி நபருக்கு எதிராக நிற்கிறார்கள். அந்தத் தனிநபர் நான்தான்.

முன்பெல்லாம், என்னைப் பற்றிய செய்திகளிலும் இரக்கம் இருக்காது. யாரும் இந்தப் பிரச்சினையை வெளியே எழுப்பவில்லை, எனக்காகக் குரல் கொடுக்கவில்லை. இன்று, இது ஒரு தீவிரமான பிரச்சினை என்று மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள், இதுகுறித்துப் பேசுவதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு, மேற்கத்திய நாடுகளில் தோன்றிய ‘மீ டூ’ இயக்கத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பாலியல்ரீதியான துன்புறுத்தல் குறித்த எந்த விழிப்புணர்வும் இங்கில்லை. காரணம், சினிமா துறையில் அது விவாதிக்கப்படாத விஷயம். இதுபோன்ற எல்லைமீறல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். ஹீரோயினை ஹீரோ சீண்டுவதாகவும், பின்னர் அந்த ஹீரோ மீதே ஹீரோயின் காதல் வயப்படுவதாகவும்தானே நமது படங்களில் காட்டுகிறோம்? எல்லா இடங்களிலும் ‘சின்னச் சின்ன’ பிரச்சினைகள் இருக்கத்தானே செய்யும் என நினைக்கும் சமூகத்தைச் சார்ந்தவர்களாக நாம் உள்ளோம். பாலியல் துன்புறுத்தல் என்றால் எது என்றே புரியாதவர் போல நானா நடிக்கிறார்.

தற்போது நிலைமை மாறத் தொடங்கியிருப்பதாக நினைக்கிறீர்களா?

ஆமாம். முன்பெல்லாம், ‘தனுஸ்ரீ குற்றஞ்சாட்டுகிறார்’ என்பது போலத்தான் செய்தி வெளிவரும். தற்போதோ, பத்திரிகைகளும், செய்திச் சேனல்களும் நடந்ததை அப்படியே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றன. முன்பு இது பற்றிய செய்தியில், நாகரிகமாக உடையணிந்த நானா படேகரின் படத்தையும், எனது கவர்ச்சியான படம் ஒன்றையும் வைப்பார்கள். அதுவே எனக்குத் தோல்வி உணர்வைத் தந்துவிடும். இவள் நல்ல பெண்ணில்லை என்பது மாதிரியான தொனி அதில் வெளிப்படும். மக்களின் பொத்தாம் பொதுவான கருத்தால் பாதிக்கப்பட்டவள் நான். நான் மட்டுமில்லை, நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்.

எப்படி என்று கூற முடியுமா?

நான் திரைத்துறைக்கு வந்தபோது, என்னை ஒரு தைரியமான, கவர்ச்சியான நடிகை என்றார்கள். இந்தியாவில் உங்களை ஒருவர் கவர்ச்சியானவர் என்று கூறினால், அது பாராட்டு அல்ல. மாறாக, உங்களை கேவலமாகக் கூறுவது. நான் ஒரு அமைதியான நபர், என்னைச் சுற்றி வளர்ந்த இந்தக் கருத்தை நான் உணரவில்லை - குறிப்பிட்ட அந்த சம்பவம் நடக்கும் வரை! என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள எனக்கு நீண்டகாலமானது. சினிமாவில் எனது சக நடிகர், நடிகைகளே என்னை மட்டமாகப் பேசியிருக்கிறார்கள் என்று அறிந்தபோது வருத்தமாக இருந்தது. எல்லோரும் என்னைப் பற்றி, நான் நடிக்கும் படங்கள் பற்றி, எனது கதாபாத்திரங்கள், உடைகள், ஆடும் பாடல்கள், எனது ஒட்டுமொத்த ஆளுமை குறித்து ஒருமாதிரியான கருத்து கொண்டிருப்பது குறித்து தாமதமாகத்தான் தெரிந்துகொண்டேன்.

நான் செக்சியாக இருக்கிறேன், கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக, எனக்கு நடந்ததை அப்படியே விட்டுவிட முடியாது. நம் நாட்டில் நிலவும் ஒரு மோசமான விஷயம், நாம் ஒரு நடிகர், நடிகையின் கதாபாத்திரத்தையும் அவரது நிஜ நடத்தையையும் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னைப் பற்றி என்னவெல்லாமோ கூறிவிட்டார்கள். நான் என்னை தற்காத்துக்கொள்ள முயலும்போது, அதிகப்பிரசங்கி என்கிறார்கள். அமைதியாக இருந்தாலோ, நாம் சினிமாவில் அணியும் ஆடைகளை வைத்து நம்மை முடிவு செய்துவிடுகிறார்கள். இப்படி, இரு முனையிலும் கூர்மையான கத்தி, இந்த சமாச்சாரம்.

நீங்கள் இந்த விஷயம் குறித்து முதலில் கூறியபோது அதிகமான பேர் ஆதரவாக இல்லை. இப்போதோ நிறையப் பேர் உங்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள். நீங்கள் இதை எதிர்பார்த்தீர்களா?

பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது இன்று பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதலாவதாக, அப்போது நான் ரொம்பச் சின்னப் பொண்ணு. சினிமாவுக்கு வந்து ஐந்தாண்டுகள்தான் ஆகியிருந்தன. தயக்கமும் கூச்சமும் உடையவளாக இருந்தேன். இன்றிருப்பதைப் போல அன்று சமூக வலைத்தளங்களும் வலுவாக இல்லை. ‘மீ டூ’ மாதிரியான இயக்கங்கள் தோன்றவில்லை. தனிநபர் எல்லை, அத்துமீறல் பற்றியெல்லாம் நாம் அப்போது பேச ஆரம்பித்திருக்கவில்லை. பாலியல் எல்லைமீறல் எல்லாம் இங்கே இயல்பான விஷயங்களாகக் கருதப்பட்டன. பெரிய நிறுவனங்கள், சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தபோதுதான், இதுகுறித்த உணர்வெல்லாம் நமக்கு ஏற்பட்டது. தற்போது எனக்கு ஆதரவாகப் பல பெண்கள், பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆனால் நீங்கள் செய்வது ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று சிலர் பேசுகிறார்களே?

நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். அங்கே காலூன்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதற்காக நான் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை. எனக்கு ஒரு மூன்று மாத கால இடைவெளி கிடைத்தது. அதில் இந்தியா வந்தேன். விமான நிலையத்தில் என்னைச் சில நிருபர்கள் கவனித்து, அமெரிக்காவில் ‘மீ டூ’ இயக்கம் பற்றிக் கேட்டார்கள். அப்போது எனக்கு நடந்ததைச் சொன்னேன். அப்போதுகூட, இந்த விஷயம் இவ்வளவு பெரிதாகும் என்று நினைக்கவில்லை. ஆனால் தற்போது அது குறித்து சந்தோஷப்படு கிறேன். நான் இவ்வளவு காலம் இதுகுறித்து ஏன் பேசவில்லை, எனக்கு ஏன் தொடர்ந்து சினிமா வாய்ப்புக் கிடைக்கவில்லை, அமெரிக்காவுக்கு ஏன் ஓடிப்போனேன் என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் இதற்கு முன்பும்தான் இதுகுறித்துப் பேசியிருக் கிறேன். இப்போதுதான் கவனிக்கிறார்கள். நான் பேசும்போதும் எனக்கு ஆதரவு கிட்டுமா, எதிர்ப்புக் கிளம்புமா என்றெல்லாம் யோசிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மற்ற நடிகைகளும் வெளியே வந்து, தங்களுக்கு நடந்ததைக் கூற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

எனக்கு சொல்லத் தெரியவில்லை. வெளியே வந்து பேசுவதற்கு பலருக்கும் பயம் இருக்கிறது. அதை நன்றாக அறிந்தவள் நான். ஒருவர் தைரியமாக பேசத் தொடங்கினால், அதை யார் தடுக்கப் போகிறார்கள்? பேசாமல் இருந்துவிட்டு, எனது பிரச்சினை அமுங்கிப்போய்விட்டது என்று பின்னால் புலம்புவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்டவர்கள், அதை எந்த வடிவிலாவது வெளிப்படுத்துவதே சரியானது.

தீர்க்கமாகச் சொல்லி முடிக்கிறார், தனுஸ்ரீ தத்தா.

Next Story