சினிமாவில் பெண்களுக்கு இது நல்ல காலம்


சினிமாவில் பெண்களுக்கு இது நல்ல காலம்
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM GMT (Updated: 19 Oct 2018 4:57 AM GMT)

சவும்யா சதானந்தனுக்கு 33 வயது. சினிமாவை அதிகம் நேசித்து திரை உலகில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், முதன் முதலில் உருவாக்கிய ‘செம்பை’ என்ற குறும்படம் தேசிய விருதினை பெற்றுக்கொடுத்தது.

வும்யா சதானந்தனுக்கு 33 வயது. சினிமாவை அதிகம் நேசித்து திரை உலகில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், முதன் முதலில் உருவாக்கிய ‘செம்பை’ என்ற குறும்படம் தேசிய விருதினை பெற்றுக்கொடுத்தது. அடுத்து மலையாள திரை உலகில் அடியெடுத்துவைத்தவர், மாங்கல்யம் தந்துனாநேனா’ என்ற படத்தை இயக்கினார். இந்த சினிமா திரைக்கு வந்து, சவும்யாவுக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறது. இவர் ஆண்களைப் போன்று குட்டையாக தலைமுடியை வெட்டியிருப்பவர். பெரும்பாலான நேரம் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருப்பார்.

“இப்படி முடியை குட்டையாக வெட்டிக்கொண்டவர்களையும், கண்ணாடி அணிந்தவர்களையும் அறிவுஜீவிகள் என்று பலரும் கருதி விடுவார்கள். என்னையும் அப்படி நினைத்துவிடாதீர்கள். நான் சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது எனது நீளமான சுருண்ட கூந்தல், பணிக்கு இடைஞ்சலாக இருந்துகொண்டிருந்தது. அதனால் கூந்தலை இப்படி குட்டையாக்கிக்கொண்டேன். டெலிவிஷனில் சினிமா பற்றி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது நிறைய சினிமாக்கள் பார்த்ததால் கண் பாதிக்கப்பட்டு கண்ணாடி அணியவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. நான் அதிரடியான சினிமாக்களை பார்த்து விசில் அடிக்கும் சராசரி பெண்.

நான் இயக்குனராக விரும்பி நிறைய கதைகளை தயார் செய்துவைத்திருந்தேன். ஆனால் அறிமுக பெண் இயக்குனர் என்பதால் வாய்ப்பு தர பலரும் தயங்கினார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தை நிறைவு செய்துவிட்டு, ஓடவிட்டு பார்த்தபோது கிடைத்த உற்சாகத்துக்கு எல்லையில்லை. அதற்காகத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்” என்கிறார்.

கேரளாவை சேர்ந்த இவர் என்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கும்போதே, புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து படிக்க நுழைவுத் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. என்ஜினீயரிங் முடித்ததும், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து அந்த பணத்தை எல்லாம் சேமித்துவைத்துக்கொண்டு, பெற்றோரிடம்கூட சொல்லாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் சுற்ற கிளம்பியிருக் கிறார்.

“நீலகிரியை பற்றி என் நண்பர்கள் குறும்படம் ஒன்று தயாரித்தார்கள். அதற்காக ஒன்றரை மாதங்கள் காட்டில் வசித்தேன். பின்பு சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினேன். டி.வி. நிறுவனத்திலும் வேலைபார்த்தேன். பிரபலமான பின்னணி பாடகர்கள் பலர் சேர்ந்து செம்பை வைத்தியநாத பாகவதருக்கு இசை விழா நடத்துவது என்னை கவர்ந்தது. அந்த ஆர்வத்தால் இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் பற்றி நிறைய படித்தேன். அதுவே என்னை அவரை பற்றி குறும்படம் எடுக்க தூண்டியது. அதற்கு தேசிய விருது கிடைத்தது. நான் இந்த உயரத்தை எட்டிப் பிடிக்க எத்தனையே கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். தோல்விகளை சந்தித்து மனஅழுத்தத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன்” என்று கூறும் இவர், திரை உலகிற்கு வர பெண்களிடம் நிறைய தயக்கம் இருப்பதாகவும் சொல்கிறார்.

“சினிமாவில் சாதிக்கும் திறமையுள்ள பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தினர்கள் அவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. என்னைப் போன்று திரை உலகிற்கு வந்தவர்கள் எல்லாம், இதிலே பைத்தியம் போல் ஆனவர்கள். எங்களுக்கும் எத்தனையோ தடைகள் ஏற்பட்டன. உடல்ரீதியாக அல்ல, மனதுக்கு சோர்வு தரும் அனுபவங்களைத்தான் நிறைய எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது சினிமாவில் நல்ல மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த நிலை நீடித்தால் பயமின்றி நிறைய பெண்கள் சினிமாவுக்குள் வருவார்கள். இது நல்ல தொடக்கம்..” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், சவும்யா சதானந்தன்.

Next Story