நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது - மோகன்லால்


நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை  மலையாள நடிகர்  சங்கம்  ஏற்று கொண்டது - மோகன்லால்
x
தினத்தந்தி 19 Oct 2018 12:22 PM GMT (Updated: 19 Oct 2018 12:22 PM GMT)

நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது என தலைவர் மோகன்லால் கூறி உள்ளார்.

கொச்சி

கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைத்து இருந்தனர்.மோகன்லால் சங்கத்துக்கு தலைவரானதும் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டார். இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ், பாவனா ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். திலீப்பை சங்கத்தில் சேர்க்க கூடாது என்றும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தினர் வற்புறுத்தினர்.

நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் கொச்சியில் நிருபர்களை சந்தித்து திலீப்பை சங்கத்தில் வைத்திருக்க மோகன்லால் விரும்புகிறார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது என்றனர். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் சித்திக், நடிகை லலிதா ஆகியோர் பெண்கலைஞர்கள் சங்கத்தினர் நடிகர் சங்கத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் திலீப் ஏற்கனவே சங்கத்துக்கு ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில்  மலையாள நடிகர்  சங்கம் அம்மா திலீப்பின் ராஜினாமா கடிதத்தை  ஏற்று கொண்டது. மலையாள சினிமா பெண் கலைஞர்கள்  விரும்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் திலீபின் ராஜினாமாவைக் ஏற்றுகொண்டதாக  பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

இருப்பினும், மலையாள நடிகர்  சங்கம்  தலைவர், பதவி விலகிய நடிகைகள் சங்கத்தில்  மீண்டும் சேர்க்கப்பட  மாட்டார்கள்  என்றும் அவர்கள் உறுப்பினர்களாக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.

அம்மா சங்க  உறுப்பினர்கள் விரைவில் அதன் உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேடக்  ஒரு தனி அமைப்பு  உருவாக்கப்படும் என கூறினர்.மேலும் கேபிஏசி லலிதா, குக்கூ பரமேஸ்வரன் மற்றும் கவியூர் பொன்னம்மா ஆகியோர்  அந்த சிறப்புகுழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என மோகன்லால் கூறினார்.  

Next Story