சினிமா செய்திகள்

மிரட்டுவதற்கு தயாராகும் ‘ஒடியன்’ + "||" + Ready to intimidate odiyan movie

மிரட்டுவதற்கு தயாராகும் ‘ஒடியன்’

மிரட்டுவதற்கு தயாராகும் ‘ஒடியன்’
அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி, ஓராண்டிற்கும் மேலாக ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம் ‘ஒடியன்’. இந்தப் படம் பேண்டசி திரில்லர் வகையில் உருவாகியிருக்கிறது.
ஒடியன் படத்தின் நாயகனான மோகன்லால், பிளாக் மெஜிசியனாக ஒடியன் மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இருவேறு தோற்றங்களில் நடித்திருக்கும் மோகன்லால், இளமையான தோற்றத்திற்கான தன் எடையை வெகுவாக குறைந்திருந்தார்.

மோகன்லாலுடன் நடிகை மஞ்சுவாரியர், பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான ‘இருவர்’ படத்திற்குப் பிறகு ‘ஒடியன்’ படத்தில் தான் மோகன்லாலும், பிரகாஷ்ராஜூம் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுத்தமாக மழிக்கப்பட்ட தாடி, மீசையுடன், கையில் டீ கிளாசை பிடித்தபடி அமர்ந்திருக்கும் மோகன்லாலின் தோற்றம், இரண்டு காளைகளுக்கு நடுவில் மோகன்லால் ஓடிவருவது போன்ற ‘ஒடியன்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள், அப்போதே ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. மோகன்லாலின் அந்தத் தோற்றம், பொலிவாகவும், வயதில் மிகவும் குறைந்தவர் போன்றும் இருந்ததே அதற்குக் காரணம்.

2016-ம் ஆண்டு வெளியான ‘புலிமுருகன்’ படம் மோகன்லாலை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியது. இந்தப் படத்தில் அமைந்திருந்த சண்டைக் காட்சிகள் மோகன்லால் ரசிகர்களை மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டிப்போட்டது. இதுவரை வெளியான மோகன்லால் படங்களில் வசூலிலும் ‘புலிமுருகன்’ திரைப்படமே முதல் இடத்தில் இருக்கிறது. முதன் முறையாக மலையாள சினிமா உலகில் ரூ.150 கோடி வசூலை எட்டிய படம் என்ற பெருமையையும் மோகன்லாலுக்குப் பெற்றுத் தந்த படம் அது.

இதையடுத்து மோகன்லால் நடிப்பில் 6 படங்களுக்கு மேல் வெளிவந்திருந்தாலும், ‘புலிமுருகன்’ படம் கொடுத்த வெற்றியையும், அதில் அமைந்ததைப் போல ரசிகர்களை திருப்திப்படுத்தும் கதையும், சண்டை காட்சிகளும் அடுத்தடுத்து வந்த படங்களில் இல்லாததால் மோகன்லாலின் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்குள்ளானார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘ஒடியன்’ திரைப்படத்தின் டீசர், மோகன்லால் ரசிகர்களை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1.28 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் வெளியாகியிருக்கும் சண்டைக் காட்சிகள் தான் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம். ‘புலிமுருகன்’ படத்தில் சண்டைக் காட்சிகள் அமைத்த பீட்டர் ஹெய்ன் தான், ‘ஒடியன்’ படத்திற்கும் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசரில் மீசை, தாடி இல்லாத இளமைத் தோற்றத்திலும், நீண்ட தலைமுடியும், தாடியும் மீசையும் கொண்ட மற்றொரு தோற்றத்திலும் மோகன்லால் தோன்றுகிறார். இளமை தோற்றத்தில் இருக்கும் மோகன்லாலின் சண்டை காட்சிகள் தான் டீசரில் இடம் பிடித்திருக்கிறது. இது ஒரு பழிவாங்கும் கதை என்பதை படத்தின் வசனங்களும், காட்சிகளும் நமக்குச் சொல்கின்றன.

இது பேய் படம் கிடையாது என்றாலும், அதற்கு இணையான இருளும், பயமும் கொண்டதாகவும் சில காட்சிகள் டீசரில் வந்து போகிறது.

இதுபோன்ற விஷயங்களால் தான் மோகன்லாலின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திளைத்திருக்கிறார்கள். நிச்சயம் இந்தப் படம் ‘புலிமுருகன்’ திரைப்படத்தைப் போல, அதிரிபுதிரி வெற்றியைப் பெறும் என்று நம்புகிறார்கள்.

புதுமுக இயக்குனரான வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு சில மாதங்களிலேயே ஒரு படத்தை முடித்து வெளியிட்டு விடுவார்கள். ஆனால் ‘ஒடியன்’ திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக ஓராண்டு காலத்திற்கு மேலாக இந்தப் படக்குழுவினர் உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்புக்கான பரிசு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.