வில்லன் நடிகர் சுதீப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


வில்லன் நடிகர் சுதீப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 9:45 PM GMT (Updated: 22 Oct 2018 5:19 PM GMT)

பெங்களூருவில் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் நடிகர் சுதீப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக வந்தார். புலி, முடிஞ்சா இவன புடி, பாகுபலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ளார். சிவராஜ் குமார் கதாநாயகனாகவும் சுதீப் வில்லனாகவும் நடித்துள்ள ‘தி வில்லன்’ என்ற கன்னட படம் இப்போது திரைக்கு வந்துள்ளது. 

எமிஜாக்சன், மிதுன் சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வெற்றிபெற சிவராஜ் குமார் ரசிகர்களும் சுதீப் ரசிகர்களும் கோவில்களில் பூஜைகள் செய்தனர். தியேட்டர்களில் பேனர்களுக்கு பாலாபிஷேகமும் செய்கிறார்கள். 

தாவண கெரே மாவட்டம் ஜகலூரில் ‘தி வில்லன்’ படம் திரையிட்டுள்ள ஒரு தியேட்டர் முன்னால் சுதீப் ரசிகர்கள் திரண்டு படம் வெற்றி பெற வேண்டி எருமை கன்றுகளை அரிவாளால் வெட்டி பலியிட்டனர். பின்னர் அந்த ரத்தத்தை எடுத்து சுதீப் பேனர்களில் தெளித்தனர். இன்னொரு தியேட்டரில் ஆடுகளை பலியிட்டு ரத்தத்தை சுதீப் பேனர்களில் தெளித்தார்கள்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. கர்நாடகாவில் விலங்குகளை பலியிட தடை உள்ளது. எனவே இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நடிகர் சிவராஜ்குமார் தனது டுவிட்டரில் ‘‘கன்றுகளை பலி கொடுப்பது மனிததன்மையற்றது. இதை ரசிகர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

படத்தின் இயக்குனர் பிரேம் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரக்ஷிதா ஆகியோரும் நடிகருக்காக பாவப்பட்ட விலங்குகளை பலியிட வேண்டாம் என்று கண்டித்துள்ளனர்.

Next Story