திவாகரன் மகன் தயாரிக்கிறார் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் லிங்குசாமி


திவாகரன் மகன் தயாரிக்கிறார் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் லிங்குசாமி
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 6:22 PM GMT)

திவாகரன் மகன் ஜெயானந் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர், நடிகைகள் வாழ்க்கை கதைகள் படமாகி வருகின்றன. அந்த வரிசையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதிலும் போட்டி ஏற்பட்டு உள்ளது. பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஏற்கனவே ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து படத்துக்கு ‘தி அயன் லேடி’ என்ற தலைப்பையும் சூட்டினார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் தேர்வாகி உள்ளார். 

டைரக்டர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படாக்குகிறார். இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்ய பரத்வாஜ் தயாரிக்கிறார். அவர் கூறும்போது, ‘‘ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவது உறுதி. படத்துக்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று பெயர் வைத்துள்ளோம். இசையமைக்க இளையராஜாவிடம் பேசி வருகிறோம்’’ என்றார். 

ஏ.எல்.விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்தும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போவதாகவும் லிங்குசாமி இயக்குவார் என்றும் நேற்று அறிவித்தார். 

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், ‘‘அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குனர் எனது நண்பர் லிங்குசாமியால் படமாக்கப்படும். இதில் நடராஜன், மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குனர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார். 

Next Story