சினிமா செய்திகள்

இயக்குனராக ஜொலிப்பாரா பிருத்விராஜ் + "||" + Will Prithviraj win as director?

இயக்குனராக ஜொலிப்பாரா பிருத்விராஜ்

இயக்குனராக ஜொலிப்பாரா பிருத்விராஜ்
மலையாள திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிருத்விராஜ், இந்திய அளவிலான சினிமாத் துறை ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.
சாக்லெட் பாய், ஆக்‌ஷன் ஹீரோ என எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் அடங்காமல், தான் செய்யும் அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் தனிப்பட்ட நடிப்புத் திறமையால் ஜொலிக்கும் ஒரு சில நடிகர்களிலும் பிருத்விராஜுக்கு தனி இடம் உண்டு.

மலையாள சினிமாத் துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இயங்கி வந்த சுகுமாரன்- நடிகை மல்லிகா ஆகியோரது மகன் தான் பிருத்விராஜ் சுகுமாரன். தந்தையும், தாயும் சினிமாத்துறை பிரபலம் என்பதால் தான் அவரால் சாதிக்க முடிந்தது என்று எவராலும் சொல்லிவிட முடியாதபடி, தன்னுடைய கடந்த கால படங்களில் எல்லாம், நடிப்பால் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர் பிருத்விராஜ்.

மலையாளத்திலும், தமிழிலும் பல வெற்றிப்படங்களை இயக்கியவரான பாசில் தான், பிருத்விராஜை இயக்குனர் ரஞ்சித்திடம் கொண்டு போய் சேர்த்தார். ரஞ்சித் அந்த நேரத்தில் தான் இயக்கிக் கொண்டிருந்த ‘நந்தனம்’ என்ற படத்தில் பிருத்விராஜிக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படம் தமிழில் தனுஷ், அனன்யா நடிப்பில் ‘சீடன்’ என்ற பெயரில் வெளியானது. ‘நந்தனம்’ தான் பிருத்விராஜ் நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் படம் என்றாலும், 2002-ம் ஆண்டு வெளியான ‘நட்சத்திரக்கண்ணுள்ள ராஜகுமாரன் அவனுன்டொரு ராஜகுமாரி’ என்ற படம் அவரது அறிமுகப்படமாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை ராஜசேனன் இயக்கியிருந்தார்.

2006-ம் ஆண்டு எம்.பத்மகுமார் இயக்கத்தில் வெளியான ‘வாஸ்தவம்’ என்ற திரைப்படம் பிருத்விராஜுக்கு, கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. 2011-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘இந்தியன் ருபீ’ என்ற திரைப்படம் தேசிய விருதைப் பெற்ற படமாகும். தவிர 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தில் சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பிருத்விராஜ் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னுடைய நடிப்புத் திறமையால் தாய் மொழியில் மட்டுமல்லாது, பிற மொழி திரைப்படங்களிலும் கோலோச்சியவர் என்பது அவரது புகழை இந்திய அளவில் பரவவிட்டிருக்கிறது. அவரது நடிப்பின் முதிர்ச்சியை அறிந்ததால் தான் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் காரணமாகவே சினிமாத் துறைக்குள் நுழைந்த 16 வருடங்களிலேயே 100 படங்களில் நடித்து முத்திரைப் பதித்திருக்கிறார்.

பிருத்விராஜ் நடிப்புத் துறை மட்மின்றி, தந்தை வழியில் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்றவர். அதே போல் பல படங்களில் பின்னணி பாடகராகவும் சில பாடல்களை பாடியிருக்கிறார். அப்படி சினிமாவில் சில துறைகளைத் தொட்டவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையும் பல ஆண்டுகளாகவே இருந்து வந்ததில் ஆச்சரியம் இல்லை. சினிமாவில் நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் பலருக்கும், தானும் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஒரு சிலரே அதற்கு விதிவிலக்காக இருப்பார்கள்.

திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையை, 2014-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிக்கொள்ள நினைத்த பிருத்விராஜ், அப்போதே ஒரு படத்தை இயக்குவதற்கான முயற்சியிலும் இறங்கினார். அதற்காக தன்னுடைய நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதைப் பெற்ற ‘வீட்டிலேக்குள்ள வழி’ என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார். அந்தப் படத்தை இந்தியில் இயக்கலாம் என்பது பிருத்விராஜின் எண்ணமாக இருந்தது. அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில், 2015-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படம் அவருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் ‘வீட்டிலேக்குள்ள வழி’ திரைப்படமும், ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே கதைக்கருவைக் கொண்டதாக அமைந்திருந்தது.

இதையடுத்து இயக்கத்தை சற்று தள்ளிப்போட்ட பிருத்விராஜ், தன்னுடைய 100-வது படத்தை நிறைவு செய்ததும், இயக்குனராகும் பணியை விரைவுபடுத்தினார். மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். தலைப்புக்கான டீசரும் கூட வெளியிடப்பட்டது. மோகன்லால் ‘ஒடியன்’ படத்திலும், பிருத்விராஜ் சில படங்களிலும் பிசியாக இருந்த காரணத்தால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ‘லூசிபர்’ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இது ஒரு அரசியல் த்ரில்லர் கதைக்களம் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இதன் கதையை நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான முரளி கோபி எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் மோகன்லாலுடன், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித், மஞ்சுவாரியர், மம்தா மோகன்தாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இதற்கிடையில் சமீபத்தில் பிருத்விராஜிடம் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். “லூசிபர் என்ற தலைப்பு ‘சாத்தான்’ என்பதைக் குறிப்பதாக உள்ளது. இது கெட்டதற்கும், நல்லதற்கும் இடையிலான போராட்டத்தை சொல்லும் கதையா?. இந்தப் படத்தில் யாருக்கு சாத்தான் எனப்படும் நெகட்டிவ் கதாபாத்திரம்” என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த பிருத்விராஜ், “ஒருவரிடம் நல்லது மட்டுமே இருக்கிறது என்றோ, அல்லது கெட்டது மட்டுமே இருக்கிறது என்றோ நாம் சொல்ல முடியாது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள இடைவெளியானது, ஒவ்வொரு வருக்கும் கூடலாம் அல்லது குறையலாம். அவ்வளவுதான் வித்தியாசம். அந்த வகையில் இந்தப் படத்தில் வரும் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரங்கள் தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிருத்விராஜின் இந்த பதில் ‘லூசிபர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்திருக்கிறது. மோகன்லால் உள்பட அனைவருமே எதிர்மறை கதாபாத்திரங்கள் தான் என்பதால், படம் எந்த வகையில் இருக்கும் என்பது ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.

100 படங்களில் நடித்தபிறகு தான் இயக்கும் முதல் படத்திற்கு ‘லூசிபர்’ என்று எதிர்மறையான தலைப்பை வைத்திருக்கும் பிருத்விராஜ், நடிகராக ஜொலிப்பதைப் போல இயக்கத்திலும் ஜொலிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிரியரின் தேர்வுகள்...