சினிமா செய்திகள்

மனித துரோகத்தைச் சொன்ன ‘த்ரீ மங்கீஸ்’ + "||" + Human treachery and said, 'Three Monkeys'

மனித துரோகத்தைச் சொன்ன ‘த்ரீ மங்கீஸ்’

மனித துரோகத்தைச் சொன்ன ‘த்ரீ மங்கீஸ்’
பேரன்பின் துல்லியம் காதல். துயரத்தின் துல்லியம் துரோகம். துரோகம் என்பது அரூப கொலைவாள். இயக்குனர் நூரி பில்ஜேசைலன். இவர் 1959-ல் துருக்கியில் இஸ்தான்புல்லில் பிறந்தார்.
நான்கு, ஐந்து மனிதர்கள். கொஞ்சம் இருட்டு, ஒரு அறை, சில சாலைகள், கொஞ்சம் மழை இவை போதும் இவருக்கு. ஒரு சர்வதேச சினிமாவை செய்து முடிக்க. இவரது படங்கள் எல்லாம் மனிதர்களின் மனஓட்டத்தையும் ஆசாபாசங்களையும், மனிதர்களின் நிலையற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். சுருக்கமாக ஜி.நாகராஜன் பாணியில் சொன்னால் “மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்” என நம்பும் இஸ்தான்புல் காரர் இவர்.

இப்படி வக்கிர மனிதர்களைக் கொண்டு துரோக வயலை உழுதிருக்கிறார், அது தான் 2008-ம் ஆண்டு வெளியான ‘த்ரீ மங்கீஸ்’ (Three Monkeys) திரைப்படம்.

நடுத்தர வர்க்க மனிதரான எயூப், தனது மனைவி ஹாசர் மற்றும் 20 வயது மகன் இஸ்மாயில் ஆகியோருடன் இஸ்தான்புல்லில் வசித்து வருகிறார். இவர் அரசியல்வாதியான செர்வட் என்பவரிடம் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

ஒரு மழை இரவில் தூக்க அயர்ச்சியில் கார் ஓட்டி வரும் செர்வட், சாலையில் ஒரு மனிதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிடுகிறார். பயந்து போய் காரில் இருந்து வெளியே சென்று பார்க்கும் செர்வட், ‘விபத்தை யாரும் அறியவில்லை’ என உறுதி செய்தபின் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

பின்னர் தனது ஓட்டுநர் எயூப்பிடம் “நீ இந்த விபத்தைச் செய்ததாக ஏற்றுக் கொள். உனது மாத ஊதியத்தை உன் மகனிடம் கொடுத்துவிடுகிறேன். அதிக பட்ச தண்டனை ஓராண்டு. அது முடிந்ததும் உனக்கு ஒரு பெரும் தொகை கொடுக்கிறேன். நீ உதவினால் என் அரசியல் வாழ்க்கை பிழைக்கும்” என வேண்டுகிறான்.

எஜமானரின் வார்த்தைகளுக்காக குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறை செல்லும் எயூப், ஓராண்டுக்கு பிறகு வீடு திரும்புகிறார். அப்போது தன் குடும்பத்தில் ஏதோ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை உணர்கிறார் எயூப். அந்த மாற்றம் என்ன என்பதும், அதன் விளைவுகள் என்ன என்பதும் தான் மீதி கதை.

எயூப் சிறையில் இருந்த சமயம், அவரது மகன் இஸ்மாயில் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. அவன் அப்பாவின் எஜமானர் செர்வட்டை சந்தித்து கார் வாங்க பணம் ஏற்பாடு செய்ய சொல்லி தன் தாய்க்கு நெருக்கடி கொடுக்கிறான். தாய் ஹாசர், அரசியல்வாதி செர்வட்டை அவனது அலுவலகத்தில் சந்தித்து உதவி பெறுகிறாள். நாட்கள் நகர்கின்றன. அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு அது ஒரு முறையற்ற உறவாக வளர்கிறது.

தனக்காக சிறை சென்ற தன் ஓட்டுநரின் குடும்பம் என்றும் நினைக்காமல் அரசியல்வாதி துரோகம் செய்வதை காட்சிப்படுத்தி இருப்பதன் மூலம் ‘மனிதன் சந்தர்ப்பங்களின் அடிமை’ என நிறுவுகிறார் இயக்குனர்.

ஒரு நாள் மகன் இஸ்மாயில், தனது தாயும் அரசியல்வாதி செர்வட்டும் படுக்கையில் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிடுகிறான்.

சிறையில் இருந்து விடுதலையாகி வந்திருந்த எயூப், தன் குடும்பத்தோடு பழைய நெருக்கத்தை உணர முடியாமல் தவிக்கிறார். அவர் வழக்கமாக செல்லும் டீக்கடைக்கு சென்று நண்பர்களுடன் நேரம் செலவிடுகிறார். இதற்கிடையில் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தாய்க்கும், மகனுக்கும் உணர்ச்சிப் போராட்டம் நடக்கிறது. அவள் செர்வட்டை மறக்க முடியாமலும் தவிக்கிறாள். ஆனால் அரசியல்வாதி செர்வட், இவர்களின் குடும்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டு குற்ற உணர்ச்சி ஏதுமில்லாமல் தன் வேலையை தொடர்கிறான்.

ஒரு நாள் பெரு மழை பெய்து கொண்டிருக்க, வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் தாய் ஹாசரை, மகன் இஸ்மாயில் தடுத்து விடுகிறான். ஆனால் இச்சம்பவத்தை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த தந்தை எயூப், அவளது தற்கொலை முயற்சியை தடுக்க மனமில்லாமல் நிற்கிறார். இக் காட்சியின் வழியே ‘எயூப் தன் மனைவியின் மரணத்தை விரும்புகிறான். ஆனால் அது கொலையாக இருக்கக்கூடாது என்றும் நினைக்கிறான். அவனால் மனைவியை மன்னிக்கவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை’ என சராசரி மனிதர்களின் குரூர மனோபாவத்தையும், இயலாமையையும், பரிதவிப்பையும் ஒரு சேர பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

இதற்கிடையில் மகன் இஸ்மாயில், செர்வட்டை கொலை செய்துவிடுகிறான். எயூப் தான் வழக்கமாக தேநீர் அருந்தும் கடையில் தனக்கு நெருக்கமான இளைஞன் ஒருவனிடம் அக்கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் படி சொல்லி தன் முதலாளி கையாண்ட அதே யுக்தியை கையாள்கிறான்.இக்கதையில் யார் எந்த வகை குரங்கு என்பதை பார்வையாளன் தான் முடிவு செய்ய வேண்டும்.

109 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த துருக்கி மொழி திரைப்படத்தில் முழுக்க முழுக்க மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். எல்லா கோணத்திலும் சுயநலம் கொண்ட மனிதர்கள், தங்கள் சுகத்திற்கும் பாதுகாப்பிற்கும் யாரையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் மகத்தான மனிதர்கள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள்.

கேன்ஸ் திரைப்பட விழா உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் ‘த்ரீ மங்கீஸ்’ படத்தின் இயக்குனருக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குனரான நூரி பில்ஜேசைலன் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி. பிறகு சினிமா கற்றுக் கொண்டு இயக்குனரான இவர் தொழில் முறை நடிகர்களை தவிர்த்து, தன் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஆகியோரையே நடிகர்களாக பயன்படுத்துவார்.

ஆம்.. மனிதன் உண்மையில் மகத்தானதொரு சல்லிப்பயல் தான்.

-தொடரும்