சினிமா செய்திகள்

நடனம்: கல்வியும் செல்வமும் தரும் + "||" + Dancing: giving at Education and wealth

நடனம்: கல்வியும் செல்வமும் தரும்

நடனம்: கல்வியும் செல்வமும் தரும்
இந்திய திரை உலகில் கொடிகட்டி பறந்த நடிகை மாதுரி தீட்சித் இப்போது நாட்டியத் துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். நடனத்தையே தனது முழுநேர சேவையாக்கிக் கொண்டுள்ளார்.
நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கென தனியாக ஒரு வலைதளத்தை தொடங்கி நடத்துகிறார். நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு, அதற்கான போட்டிகளுக்கு நடுவராகவும் செயல்படுகிறார். நாட்டியத்தோடு இரண்டற கலந்துவிட்ட அவர், அது பற்றி சொல்கிறார்:

‘‘இளைய தலைமுறையினரிடையே நாட்டியம் பிரபலமாகி வருவது வரவேற்கத்தகுந்தது. நாட்டியம் காண்பவர்களை மட்டுமல்லாமல் ஆடுபவர்களையும் உற்சாகப்படுத்துகிறது. இது வெறும் பொழுதுபோக்கும் அம்சம் அல்ல, நல்ல உடற்பயிற்சி.

குழந்தைகளிடம் நாட்டியத் திறன் இருப்பதை பெற்றோர் அறிந்தால், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். முறையான பயிற்சியளிக்க முன்வர வேண்டும். நாட்டிய பயிற்சி, அவர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவும். கல்வியோடு சேர்த்து நாட்டியத்தையும் வழங்கினால், குழந்தைகளுக்கு அபார பலன் கிடைக்கும். உடலின் உள்உறுப்புகளை ஆரோக்கியமாக இயங்க வைத்து, மூளையை சுறுசுறுப்பாக்குவது நாட்டியம் என்று அறிவியல் கூறுகிறது.

குழந்தைகளுக்கு கல்வி தரும் மனஅழுத்தத்தை குறைக்க நடனத்தால் முடியும். மனதை அமைதிப் படுத்தி மனச்சோர்வையும் நீக்கும். ஹைபர்டென்ஷன் உள்ள குழந்தைகளை சமாளிப்பது கஷ்டம். அவர் களுக்கு நாட்டிய பயிற்சியளித்துப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடும். அவர்களது மனதை நாட்டியத்தில் திசை திருப்புவதன் மூலம் அவர்களை மிகச்சிறந்த நாட்டிய மேதைகளாக்கலாம்.

இன்றைய இளைஞர்கள் உடலை கட்டமைப்பாக வைத்துக்கொள்ள பெரும்பாடு படுகிறார்கள். அவர் களுக்கு நாட்டியம் உதவுவது போல வேறு எதுவும் உதவுவதில்லை. எந்த வயதிலும் உடலை அழகாக கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ள நாட்டியம் பயன்படுகிறது. சினிமாவிலும், நாட்டிய போட்டிகளிலும் பங்குபெற விரும்புகிறவர்களுக்கு பயிற்சியளிக்க இப்போது நிறைய பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் நாட்டிய பள்ளிகள் நடத்தி எதிர்காலத்தில் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

சிறுவயதில் நான் நாட்டியமாடியதை எங்கள் குடும்பத்தில் அனைவரும் விளையாட்டாக ரசித்தார்கள். பிறகு எனக்குள் அந்த திறமை இருப்பதை கண்டு முறையாக பயிற்சியளித்தார்கள். சிறுவயதில் நான் ஊக்குவிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று உங்கள் முன் இப்படி நாட்டிய நாயகியாக நின்றிருக்க முடியாது. இதற்கு நான் என் குடும்பத்தினருக்குதான் நன்றி சொல்லவேண்டும். எனது அம்மாவுக்கும் நாட்டிய ஆர்வம் உண்டு. அவர் முறைப்படி பயிற்சி பெறாவிட்டாலும் நன்றாக நாட்டியம் ஆடுவார்.

முற்காலத்தில் நாட்டியம் ஒரு பொழுதுபோக்காக மட்டுமே கருதப்பட்டது. அதனால் கல்வி பாதிக்கும் என்று கருதி பலரும் நாட்டியத்தில் குழந்தைகளை ஊக்குவிக்கவில்லை. அப்போது நாட்டியத்தை தொழிலாக செய்வதை யாரும் வரவேற்கவில்லை. இப்போது அப்படி இல்லை. நாட்டியத்தின் மதிப்பை புரிந்து கொண்டார்கள். இதுவும் ஒரு கல்வி என்பதை தெரிந்து குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள்.

நான் கதக் நடனத்தை முறைப்படி கற்றுக் கொண்டேன். நேரம் கிடைக்கும்போது அதை பயிற்சியும் செய்து வருகிறேன். கற்றும் கொடுக்கிறேன். வருங்காலத்தில் என் பெயர் சொல்ல நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

நான் ஆடிய ‘ஏக்.. தோ.. தீன்’ பாட்டை ரீமேக் செய்தார்கள். அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அந்த ரீமேக்கில் ஜாக்குலின் நன்றாகவே ஆடி இருந்தார். ஆனாலும் மக்கள் ரசிக்கவில்லை. ஒரு சில விஷயங்களை பழமையாகவே இருக்க அனுமதிக்கவேண்டும். மக்கள் மனதில் பதிந்துவிட்ட பழமையை புதுமைப்படுத்த முடியாது. பழமை என்பது வேண்டாத ஒன்றல்ல. அது உணர்வுபூர்வமான விஷயம். அந்த உணர்வுகளை புதுமைப் படுத்த முடியாது. காலத்துக்கு தக்கபடி ஏற்படுத்தப்படும் புதுமைகளைத்தான் மக்கள் ரசிப்பார்கள்.

என் குழந்தைகள் நாட்டியமாடுவதை நான் நிச்சயமாக ஊக்குவிப்பேன். ஆனால் அவர்களை வற்புறுத்த மாட்டேன். நான் சினிமாக்களில் ஆடியதை பார்த்து என் அம்மா, ‘மாதுரி உன்னோடு சேர்ந்து ஆடவேண்டும் போல இருக்கிறது’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் அவருடைய அந்த ஆசை நிறைவேறவில்லை. இப்போது என் பிள்ளைகளோடு சேர்ந்து நான் நாட்டியமாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஒரு நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்துவதே நாட்டியம் தான். கண்ணுக்கும் கலாசாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஒரு நாட்டை நாம் அடையாளம் காண்பதே கண்களின் மூலம்தான். கண் போன்றது நாட்டியம்"

மகிழ்வோடு சொல்கிறார், மாதுரி தீட்சித்.