பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள்: கமல்ஹாசன் வெளியிடும் ‘மீ டூ’ பாடல்


பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள்: கமல்ஹாசன் வெளியிடும் ‘மீ டூ’  பாடல்
x
தினத்தந்தி 1 Nov 2018 11:45 PM GMT (Updated: 1 Nov 2018 8:08 PM GMT)

‘மீ டூ’ புகார்கள் நாட்டை உலுக்கி வருகிறது. நடிகைகளும், மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

பாலியல் கொடுமைகளை சித்தரிக்கும் மீ டூ வீடியோ பாடல் இந்த நிலையில்  தயாராகி உள்ளது. இந்த பாடலை வாகை சூடவா, விஸ்வரூபம்–2, உத்தமவில்லன், பாபநாசம், தூங்கா வனம், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் உருவாக்கி உள்ளார்.

இவரே மீ டூ பாடலுக்கு இசையமைத்து டைரக்டு செய்ததுடன் அனிமே‌ஷன் காட்சிகளையும் உருவாக்கி உள்ளார். ‘‘அண்ணனென்றேன் ஆசானென்றேன், நேசமெல்லாம் வே‌ஷமா, மனிதம் இல்லா மனிதா அசுரா. என் மேல் வைக்கிற கையை எடு. போகும் பாதை எங்கும் எந்தன் கற்பும் கூட குப்பையா.

கோவிலில் சிலைகளை தாயென்று கும்பிட்டு புரளுகிறான். தாயையும் சேயையும் நாயாய் விரட்டும் பேய்களை அழிக்க பெரியார் இல்லை. கும்மியடிக்கும் பெண்களை மிரட்டும் காமுகனை கொல்ல பாரதி இல்லை’’ என்பன போன்ற வரிகள் பாடலில் இடம்பெற்று உள்ளன. இந்த பாடலை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிடுகிறார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, ‘‘சமூகத்துக்கு நல்லது செய்யும் நோக்கோடு பாலியலுக்கு எதிரான இந்த பாடலை தயார் செய்துள்ளேன். அனிமே‌ஷன் கற்று இந்த வீடியோ பாடலில் அனிமே‌ஷன் காட்சிகளையும் நானே உருவாக்கினேன். நிறைய பேர் இதற்கு உதவினர்’’ என்றார்.

Next Story