சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில், விக்ரம் + "||" + In the new look, Vikram

புதிய தோற்றத்தில், விக்ரம்

புதிய தோற்றத்தில், விக்ரம்
கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரமின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.
விக்ரம் நடிப்பில் இந்த வருடம் ஸ்கெட்ச், சாமி–2 படங்கள் வந்தன. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நே‌ஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்துக்கு கடாரம் கொண்டான் என்று பெயரிட்டுள்ளனர். ராஜேஷ் செல்வா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் படத்தை டைரக்டு செய்தவர். விக்ரம் ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தில் விக்ரமின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். 

இதில் அவர் உடலில் பச்சை குத்தி ஆவேசமாக முரட்டுத்தனத்தில் இருக்கிறார். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனை கடாரம் கொண்டான் என்று அழைப்பது உண்டு. 

ராஜேந்திர சோழன் வீரம் மற்றும் விவேகத்தில் சிறந்து விளங்கியவர். மலேசியா அருகில் உள்ள கடாரம் வரை போர் தொடுத்து அந்த பகுதியை வென்றதால் கடாரம் கொண்டான் என்று அழைக்கப்பட்டார். அந்த பெயரில் விக்ரம் படம் தயாராவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.