சினிமா செய்திகள்

சர்கார் படத்துக்கு எதிராக கையை முறுக்குவதா?நடிகை குஷ்பு, விஷால் கண்டனம் + "||" + Actress Khushboo, Vishal is condemned

சர்கார் படத்துக்கு எதிராக கையை முறுக்குவதா?நடிகை குஷ்பு, விஷால் கண்டனம்

சர்கார் படத்துக்கு எதிராக கையை முறுக்குவதா?நடிகை குஷ்பு, விஷால் கண்டனம்
சர்கார் படத்துக்கு எதிராக கையை முறுக்குவதா? என்று நடிகை குஷ்புவும் நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள சர்கார் படத்தில் அரசை விமர்சிக்கும் வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் அள்ளிப்போட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளை வைத்து இருப்பதாகவும் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

இந்த படத்தை கண்டித்து போராட்டங்களும் நடந்து வருகின்றன. சர்கார் படம் திரையிட்டுள்ள தியேட்டர்களில் அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். விஜய்யின் பேனர்களும் கிழிக்கப்பட்டு உள்ளன. படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய முயற்சி நடப்பதாகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கைகளை நடிகர்–நடிகைகள் விமர்சித்து வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் டுவிட்டரில் கண்டித்தனர். இப்போது நடிகை குஷ்புவும் கண்டித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘ஒரு படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பிறகு இயக்குனருக்கு எதிராக அத்துமீறும் உரிமையை யார் கொடுத்தது? இதன்மூலம் கதையில் வரும் சிறிய வி‌ஷயங்கள் கூட தமிழகத்தை கொள்ளையடிப்பவர்களை அச்சுறுத்துகிறது என்பது தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்வது தெரிகிறது. கையை முறுக்குவது மிரட்டுவது, பயத்தை உருவாக்குவது என்பதெல்லாம் புதிது அல்ல. முந்தைய விஜய் படங்களுக்கும் இதுபோல் ஏற்பட்டதை பார்த்து விட்டோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். அ.தி.மு.க.வுக்கு பில்டிங் ஸ்டிராங்க். பேஸ்மென்ட் வீக்’

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

நடிகர் விஷால் டுவிட்டரில், ‘‘ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் போலீஸ் எதற்காக? எதுவும் எதிர்மறையாக நடக்காது என்று நம்புகிறேன். தணிக்கை குழு அனுமதி கொடுத்துவிட்டது. படத்தை மக்கள் பார்க்கிறார்கள். இதில் ஏன் இவ்வளவு களேபரம்?’’ என்று கூறியுள்ளார்.

டைரக்டர் பா.ரஞ்சித் கூறும்போது, ‘சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும் வன்முறையையும் கையாளுவதற்கு தெரிந்தே இருக்கிறது. இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து போய்விட்டது’ என்றார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘சமீபத்தில் தீபாவளி அன்று வெளியான ‘சர்கார்’ படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததாகவும்,  அதனால் ஏற்பட்ட நிகழ்வுகளையும் கண்டு கவலை கொள்கிறோம். சமூக அக்கறையுள்ள சில படைப்பாளிகள் சில அவலங்களையும், வேதனைகளையும் சுட்டிக்காட்டி, படம் எடுப்பது அரிய நிகழ்ச்சி அல்ல. சகோதரர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்திலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இதுபோன்ற சில கருத்துகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனால் கோபப்பட்ட சிலர் திரைப்பட பேனர்களை கிழிப்பதும், திரையரங்குகளில் சட்டம்–ஒழுங்கை குலைப்பதும் ஏற்புடைய செயல் அல்ல. அதேபோல் அரசியல் ரீதியாக படம் எடுக்கும் படைப்பாளிகள் இதுபோன்ற திரைப்படங்களை இயக்கும்போது, தனி மனித தாக்குதல்களோ அல்லது காழ்ப்புணர்ச்சி கருத்துகளோ இல்லாமல் திரைப்படங்களை இயக்க வேண்டும். அதுவே திரைப்பட துறைக்கு நன்மை பயக்கும் செயல் ஆகும்.’’

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...