சினிமா செய்திகள்

தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி + "||" + dropped mvoies 1000: Muted money Rs 2,000 crore

தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி

தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி
தமிழில் முதல் சினிமா படம் 1918-ல் வெளிவந்தது. ஆரம்ப காலத்தில் ஊமை படங்களே வெளிவந்தன. தமிழில் முதல் பேசும் படம் 1931-ல் வெளியானது.
2017-ல் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் 101 வயது.

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன் என்று 5 முதல்வர்கள் சினிமாவில் இருந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள்.


இவர்கள் பாதையில் பயணித்த தமிழ் பட உலகம் இன்றைக்கு பல இன்னல் களில் சிக்கித்தவிக்கிறது.

தமிழ் சினிமா, ஆரம்ப காலத்தில் தயாரிப்பாளர்கள் கையிலும், பையிலும் இருந்தது. அதன் பிறகு இயக்குனர்கள் கைக்கு மாறி அவர்கள் கதையிலும், திரைக்கதையிலும், வசனத்திலும் பயணித்தது.

பின்னர் கதாநாயகர்கள் கைக்கு தாவியது. அதன் பிறகு விநியோகஸ்தர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து இப்போது தியேட்டர் அதிபர்களிடமும், சில கதாநாயகர்களிடமும் மாறி மாறி ஆட்டம் காட்டுகிறது.

2000-ம் ஆண்டு வரைக்கும் திரைப்படம் தயாரிப்பது சவாலான விஷயம். படங்கள் வியாபாரமும் சுறுசுறுப்பாக இருந்தன.

நெகட்டிவ் போய் சிப் முறைக்கு திரைப்படங்கள் வந்த பிறகுதான் சினிமாவை கிரகணம் பிடித்தது.

நெகட்டிவில் படம் தயாரிக்கும்போது தொழில் தெரிந்த கலைஞர்கள் திரைப்படத்துறையில் கோலோச்சினார்கள். அப்போது கடுமையான வேலை இருந்தது. ஓய்வும் கிடைக்காது. சம்பளமும் குறைவு. இன்றைய சிப் யுகத்தில் டெக்னாலஜி வளர்ந்து திரைப்படங்கள் உள்ளங்கை வரைக்கும் வந்து விட்ட நிலையில் சம்பளம் எகிறி விட்டது.

என்ன பிரச்சினை இருந்தாலும் படங்கள் தயாரிப்பது மட்டும் குறையவில்லை. அதே நேரம் படங்கள் வியாபாரமும் ஆகவில்லை. தியேட்டருக்கு வந்த படங்கள் ஓடுவதும் இல்லை.

இதனால் திரைத்துறையில் படப்பிடிப்புகள், தணிக்கைகள் முடிந்து வியாபாரம் ஆகாமலும், நிதி பிரச்சினையிலும் சிக்கி 1000-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய படங்கள் தேங்கிக்கிடக்கின்றன என்றும், இதன் மூலம் பட அதிபர்கள் செலவிட்ட ரூ.2,000 கோடிக்கு மேற்பட்ட தொகை முடங்கி கிடக்கின்றன என்றும் மூத்த தயாரிப்பாளர்கள் கணக்கு சொல்கிறார்கள்.

ஏன் இந்த நிலைமை? மக்கள் ரசனை குறைந்து விட்டதா? டிக்கெட் கட்டணமா? கதாநாயகர்களின் அளவுக்கு அதிகமான சம்பளமா? திரையரங்குகளின் போக்கா..? சற்று பின்னோக்கி சென்றால் விளங்கும்.

முன்பு படம் வெளியானவுடன் அந்தந்த ஏரியாவில் உள்ள வினியோகஸ்தர்கள் சென்னை-செங்கல்பட்டு, வட ஆற்காடு -தென் ஆற்காடு, மதுரை-ராமநாதபுரம், திருச்சி-தஞ்சாவூர், திருநெல்வேலி- கன்னியாகுமரி, சேலம்-கோவை என்று 9 ஏரியாவாக பிரித்து ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு விலையை நிர்ணயம் செய்து அட்வான்ஸ் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்.

தங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளை தொடர்பு கொண்டு படம் வாங்கிய விவரத்தை சொல்வார்கள். தியேட்டர் அதிபர்களும் குறிப்பிட்ட தொகையை வினியோகஸ்தர்களுக்கு கொடுத்து தங்கள் திரையரங்குகளில் படத்தை திரையிட ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். படம் வெளியான பிறகு லாப நஷ்டங்களை இரு தரப்பினரும் பிரித்துக்கொள்வார்கள். அப்படி இருந்த சினிமா இப்போது இல்லை.

வினியோகஸ்தர்களாக இருந்தவர்கள் வியாபார தொடர்பாளராக மாறிவிட்டனர். பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், குடோன்களாகவும் மாறிவிட்டன.

சென்னையில் பாரகன், பிளாசா, சித்ரா, கெயிட்டி, மிட்லண்ட், வெலிங்டன், ஸ்டார், காமதேனு, கபாலி, அலங்கார், மெலோடி, சன், உமா, ராம், லிபர்ட்டி, கிருஷ்ணவேனி, நூர்ஜஹான், ஜெயராஜ், பிரபாத் என்று பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன.

இதுபோல் தமிழகமெங்கும் தியேட்டர்கள் இருந்த இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், திருமண மண்டபங்களும் முளைத்துள்ளன. திரைப்படங்கள் சொல்போன், கணினி வழியாக ரசிகர்களுக்கு செல்கின்றன.

முன்பெல்லாம் ஒவ்வொரு ஏரியாவிலும் மூன்று அல்லது நான்கு திரையரங்குகளில் திரையிடப்படும் படங்கள் தமிழகம் முழுவதும் அதிகபட்சம் 30 முதல் 50 திரையரங்குகளில் வெளியாகும். அவை 100 நாட்கள், 200 நாட்கள் என ஓடி வசூல் புரியும். லாபம் ஈட்டித்தரும்.

இப்போது 100 அல்லது 200 திரையரங்குகளில் வெளிவரும் படங்கள் மூன்று நாட்கள் ஓடுவதே பெரிய விஷயம்.

திரைப்படங்களின் வியாபாரம் திரையரங்குகள் தவிர, வெளிநாடு, தொலைக்காட்சி, இணையதளம், டிஜிட்டல், கைபேசி உரிமை, விமானம், கப்பல், பேருந்துகள் என விரிந்திருந்தாலும் தயாரிப்பாளர்கள் பூஜ்ஜியத்தில்தான் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஜி.எஸ்.டி, எஸ்.ஜி, எஸ்.டி, தமிழக அரசின் வரி, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கட்டணம், நொறுக்குத்தீனி வியாபாரம், போகவர பெட்ரோல் செலவு, டிக்கெட் கட்டணம் இவை அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் வருமானம் உள்ளவர்கள் மட்டுமே திரையரங்கிற்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் எண்ணிக்கை குறைவுதான்.

முன்பெல்லாம் 60 முதல் 80 சதவீத மக்கள் தியேட்டருக்கு சென்று படங்கள் பார்த்தார்கள். இப்போது வெறும் 10 முதல் 20 சதவீதம் பேரே வருகிறார்கள்.

திருட்டு வி.சி.டியிலும், உரிமை பெறாமல் வெளியிடும் இணையதளங்களிலும் படங்கள் பார்க்கும் நிலைமை உள்ளது.

தயாரிப்பாளர்களையும் நடிகர்-நடிகைகள் சம்பளம், தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவு, டப்பிங், ரிக்கார்டிங், ரீ ரிக்கார்டிங், கலர், இணையதளம், போஸ்டர், பிளக்ஸ், பேருந்து, ஆட்டோ பின்னால் ஸ்லைடு, திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிட கட்டணம், அதற்கு மேல் பைனான்ஸ் வட்டி, அதற்கான கமிஷன் தொகை, தியேட்டர் கன்பர்மேஷன் என்று பல செலவுகள் அழுத்துகின்றன.

படங்களை தயாரித்து தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களை மீட்பதும் அவர்கள் செலவிட்ட பல கோடி தொகையை திரும்ப கிடைக்க செய்வதும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடமையாக இருக்கிறது.

முடங்கிய படங்கள் பட்டியலில் முன்னணி நடிகர்கள், புதுமுகங்கள் மற்றும் பெரிய இயக்குனர்கள் படங்களும் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தேங்கும் படங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன.

பிரபலங்களின் படங்கள் வெளிவராமல் போனதற்கு காரணம் பைனான்ஸ் மற்றும் மார்க்கெட் போனதாக இருக்கும். புதுமுகங்களின் படங்கள் தணிக்கையான பிறகும் வெளியாகாமல் இருப்பதற்கு பல காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் 100-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒன்றோ இரண்டோதான் வசூலில் அசத்தும். மீதி எல்லாமே நஷ்டம்தான். இதனால் புதுமுகங்கள் படங்களை வாங்கி வெளியிட யாரும் முன்வருவது இல்லை. சில படங்கள் கடன் பிரச்சினையில் சிக்கி உள்ளன. புதுமுகங்கள் படங்களுக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்காது. படம் சரியாக வந்து இருக்காது.

இதற்கெல்லாம் மேல் நெகட்டிவ் போய் டிஜிட்டல் (சிப்) முறை வந்ததனால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று ஆகிவிட்டது.

இதனால் ஈசல்போல் படங்களை தரமில்லாமல் தயாரித்து லேப்டாப்பில் வைத்துக்கொண்டு சுற்றுகின்றனர். இதில் மொத்த பணமும் விரயமானதுதான் மிச்சம். இவையும் நஷ்ட கணக்கில்தானே வரும்.

மகன், மாமன், மகள், தம்பி, அண்ணன் என்று குடும்ப உறவுகளை வைத்து படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டவர்களும் உள்ளனர்.

எந்த வித கியாரண்டியும் இல்லாமல் மக்களை மட்டுமே நம்பி முதலீடு செய்யும் தொழில்தான் சினிமா. அன்றைய சினிமாவில் வெற்றி பெற்றது பெரிய விஷயம் இல்லை. இன்றைய காலத்தில் வெற்றி என்பது சவாலானது.

எனவே பட தயாரிப்பில் யோசித்தே இறங்க வேண்டும். வெளிவராமல் முடங்கி கிடக்கும் திரைப்படங்கள் விவரத்தை சேகரித்து அவை வெளியாகாத காரணங்களை ஆய்வு செய்து குறைகளை களைந்து அந்த படங்கள் வெளிவர அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.

இதற்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கலாம் என்பதும், கடன் கொடுத்தவர்கள் வட்டியை தள்ளுபடி செய்யலாம் என்பதும் பாதிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரச்சினை தீர என்ன வழி? திரையுலகினர் கருத்து

‘தியேட்டர் கிடைப்பது இல்லை’ -விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்

தமிழ் திரையுலகம் பல வருடங்களாக இந்த பிரச்சினையை சந்தித்து வருகிறது. வருடத்துக்கு வருடம் ‘ரிலீஸ்’ ஆகாமல் தேங்கி கிடக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்கள்தான் அதிகமாக உள்ளன. வியாபாரத்துக்காக, தேங்கிக் கிடக்கும் படங்களை பலமுறை திரையிட்டு காண்பித்த பிறகும், யாரும் வாங்குவதில்லை.

குறைந்த பட்ஜெட் படங்களுக்கு, ‘சாட்டிலைட்’ வியாபாரம் முன்பு கைகொடுத்தது. இப்போது, ‘சாட்டிலைட்’ வியாபாரமும் முன்பு போல் இல்லை. நான் தயாரித்து நடித்த ‘இரும்புத்திரை’ படமும் இந்த பிரச்சினையில் சிக்கியது. எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகாததால், 2 மாதங்கள் காத்திருந்து, அதன் பிறகு படத்தை விற்றேன். இப்படி எத்தனை பேர் தாக்குப் பிடிக்க முடியும்?

குறைந்த பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அவர்களின் இன்னொரு பிரச்சினை, இது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த நடவடிக்கை காரணமாக, இந்த வருடம் குறைந்த பட்ஜெட் படங்கள் அதிகமாக திரைக்கு வந்துள்ளன. அந்த படங்களுக்கு வழிவிட்டு, அதிக பட்ஜெட்டில் தயாரான படங்களை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே ‘ரிலீஸ்’ செய்ததன் காரணமாக, நெரிசல் இல்லை.

இப்போதெல்லாம் வருடத்துக்கு குறைந்தபட்சம், 220 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், குறைந்த பட்ஜெட் படங்களே அதிகம். படம் தயாரிப்பவர்களை, தயாரிக்க கூடாது என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. தேங்கிக் கிடக்கும் படங்களை திரைக்கு கொண்டு வருவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ, அந்த நடவடிக்கைகளை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாடுபடும்.”

‘பல காரணங்கள் உள்ளன’- டி.ஏ. அருள்பதி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர்

படங்கள் திரைக்கு வராததற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கால்வாசி படப்பிடிப்பை நடத்தியதோடு பணம் இல்லாமல் படத்தை நிறுத்தி இருக்கலாம். சில படங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் முடங்கி இருக்கலாம். இன்னும் சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்கலாம். மற்ற படங்கள் வியாபாரம் ஆகி இருக்காது.

ஒரு படத்தை திரைக்கு கொண்டு வர விளம்பரங்கள் செய்தல் உள்பட பல்வேறு வழிகளில் ரூ.75 லட்சம் செலவிட வேண்டி இருக்கும். ஆனால் படம் அந்த அளவுக்கு வியாபாரம் ஆகி இருக்காது. செலவிட்ட பணம் வசூல் ஆகுமா? என்பதும் சந்தேகம். அத்தகைய படங்களை திரைக்கு கொண்டு வராமல் அப்படியே போட்டு விடுகின்றனர். விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல படங்களை திரைக்கு கொண்டு வந்துள்ளது.

‘திரைக்கு கொண்டு வருவது கஷ்டம்’ - நாசர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்

நான் 4 படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறேன். அதன் மூலம் படங்கள் தயாரிப்பு பற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. படம் எடுப்பது என்பது சிரமமான வேலை இல்லை. பத்தாயிரம் ரூபாய் செலவிலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடி செலவிட்டும் படங்கள் எடுக்கலாம். எல்லா தயாரிப்பாளர்களும் படங்கள் எடுப்பதை விட அவற்றை திரைக்கு கொண்டு வருவதில்தான் கஷ்டப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான படங்கள் தணிக்கை முடிந்தும் கூட வெளிவராமல் முடங்கி கிடக்கின்றன. அதற்கான காரணங்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.

‘சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்’ -கேயார், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்

சினிமா டிஜிட்டல் ஆன பிறகு ரூ.50 லட்சம் ரூ.70 லட்சத்தில் படம் எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதை ஒரு புறம் வரவேற்றாலும் இன்னொருபுறம் அதனால் சங்கடங்களும் இருக்கிறது. சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பதுபோல தயாரித்த படங்களை திரைக்கு கொண்டுவர 75 லட்சம் ரூ.1 கோடி என்று செலவிட வேண்டி உள்ளது.

படங்கள் வியாபாரம் ஆனால்தான் அது சாத்தியம். எனவே புதியவர்கள் குறும்படங்கள் எடுத்து யுடியூப்பில் வெளியிட்டு அனுபவம் பெற்ற பிறகு சினிமாவுக்குள் வரலாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அதிகம் உருவாகி விட்டன. எதிர்காலத்தில் தனி திரையரங்குகள் இருக்காது. ஒரே நேரத்தில் 4, 5 படங்களை ரிலீஸ் செய்வதை தவிர்த்து இரண்டு படங்களை மட்டும் வெளியிட்டு ஒரு படம் பார்த்தால் ஒரு படம் இலவசம் என்ற கொள்கை வகுத்து வசூலாகும் தொகையில் இரு தயாரிப்பாளர்களும் பங்கு போட்டுக்கொண்டால் படங்கள் முடங்குவதை தவிர்க்கலாம்.

தனியார்கள் மூலம் 200 பேர் அமரும் மினி தியேட்டர்களை அரசு உருவாக்கலாம். ஓட்டல்களிலும் 50, 100 இருக்கைகள் ஒதுக்கி படங்கள் திரையிட அனுமதி கொடுப்பது போன்ற வித்தியாசமான யுக்திகளை கையாண்டால்தான் சினிமா வாழும்.

பெட்டிக்குள் சுருண்ட படங்கள் பட்டியல்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படம் 2012-ல் முடிந்து 6 வருடங்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தனது மகனை கதாநாயகனாக வைத்து தயாரித்த கோடீஸ்வரன் உள்பட 2 படங்கள் வெளியாகவில்லை. பிரசாந்த் நடிப்பில் ராதாமோகன் இயக்கிய படமும் வரவில்லை.

30 வருடங்களுக்கு முன்பு புதுமுகங்கள் நடிப்பில் உருவான நிலாச்சோறு படம் வரவே இல்லை.

சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த அத்தை மகன் படம் முடிந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பெட்டியில் தூங்குகிறது.

ராஜ்கபூர் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்த படம், கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உதயா நடித்த காதல் ஜாதி ஆகிய படங்களும் வெளியாகவில்லை.

உதயாவின் ஆசாமி, பூங்குயிலே ஆகிய படங்களும் பெட்டிக்குள் சுருண்டுள்ளன.

இதுபோல் புதுமுகங்கள் நடித்த தஞ்சாவூர் மைனர், சேரன் தயாரிப்பில் ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை, சரவணன் நடித்துள்ள அர்ஜுன், முரளி, ராம்கி நடித்த இருவல்லவர்கள், அங்காடி தெரு மகேஷின் வெயிலோடு விளையாடு, கஸ்தூரி ராஜா இயக்கிய காசு பணம் துட்டு, ரதன் சந்திர சேகர் இயக்கிய என்பெயர் குமாரசாமி, புதுமுகங்கள் நடித்துள்ள அலையே அலையே, தேன்கூடு ஆகிய படங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ஒரு படமும் வெளியாகாமல் நிற்கிறது.

இப்படி ரிலீசாகாத படங்களின் பட்டியலில் 1,000 படங்கள் உள்ளன என்கின்றனர். இதுபோல் பல லட்சம் செலவிட்டு பாதியில் நின்றுபோன படங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன.

கமல்ஹாசனின் மருதநாயகம் 25 சதவீதம் முடிந்த நிலையில் முடங்கி போனது.

சரண் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ஏறுமுகம் படத்தை 15 நாட்கள் படப்பிடிப்போடு நிறுத்தி விட்டனர்.

ஷங்கர் தயாரிப்பில் வடிவேல் நடித்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி படமும் 15 நாட்கள் படப்பிடிப்புடன் நின்று இருக்கிறது. இதற்கு ரூ.6 கோடியை செலவிட்டு வீணாகப் போனது என்கின்றனர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த ராணா ஒரு பாடல் காட்சியுடனும், தனுஷ் நடிப்பதாக இருந்த ‘ஓடிப்போலாமா’ பூஜையோடும் நின்றுபோனது.