படங்கள் வெளியிடுவதில் விதியை மீறுவதா? - பட அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு


படங்கள் வெளியிடுவதில் விதியை மீறுவதா? - பட அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 9:44 PM GMT (Updated: 11 Nov 2018 9:51 PM GMT)

படங்கள் வெளியிடுவதில் விதிகள் மீறப்படுவதற்கு, பட அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் கடந்த காலங்களில் ஒரே நாளில் வெளியானதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வசூலும் பாதிக்கப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி சங்கமே படங்களை வெளியிடும் தேதிகளை ஒதுக்கி கொடுத்தது. வருகிற 16-ந்தேதி வெளியாகும் படங்கள் பட்டியலையும் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி, உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா நகுல் நடித்துள்ள செய் மற்றும் சித்திரம் பேசுதடி ஆகிய 4 படங்கள் உள்ளன.

ஆனால் சங்கத்தில் அனுமதி பெறாமல் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தையும் திரைக்கு கொண்டு வரமுயற்சி நடப்பதாகவும் அந்த படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகர் உதயா கூறும்போது சிறுபடங்களுக்கு ஒதுக்கி உள்ள தேதியில் திமிரு புடிச்சவன் படத்தை திரையிடுவது விதியை மீறிய செயல் என்றார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிய படங்களுக்காக ஒதுக்கியுள்ள தேதியான 16-ந்தேதி அனுமதி பெறாத படங்களை வெளியிட்டு மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்க விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது.



Next Story