சிம்பு படத்துக்கு தடையா? - ரசிகர்கள் எதிர்ப்பு


சிம்பு படத்துக்கு தடையா? - ரசிகர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:30 PM GMT (Updated: 12 Nov 2018 10:26 PM GMT)

சிம்பு படத்துக்கு ஏற்பட்டுள்ள தடைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கம் கேட்டது. தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் வற்புறுத்திய நிலையில் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் வெளிவந்துவிட்டது.

இப்போது சுந்தர்.சி இயக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து பேசி வீடியோ வெளியிட்டு உள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story