ரஜினியை விமர்சித்த கஸ்தூரி


ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
x
தினத்தந்தி 13 Nov 2018 10:30 PM GMT (Updated: 13 Nov 2018 5:24 PM GMT)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள்.

அவர்களை விடுதலை செய்வது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியபோது எந்த 7 பேர் என்று கேட்டார்.

இந்த பதில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி உள்ளன. ‘எந்த 7 பேர்’ என்ற ஹேஷ்டேக்கின் கீழ் கிண்டல்களும் பதிவாகிறது. டெலிவி‌ஷன்களிலும் இது விவாதமாக மாறியது.

நடிகை கஸ்தூரியும் ரஜினிகாந்தை விமர்சித்து உள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த யாரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல் எப்படி இருக்க முடியும். ரஜினிகாந்த் தமிழக பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது
அப்பாவித்தனம் இல்லை. அறியாமை. அவருக்கு அந்த 7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் கூறவில்லை. நடப்பு வி‌ஷயத்தை அறியவில்லை என்று கூறியுள்ளார்.

முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது பொருத்தமானது இல்லை. தலைவர்கள் அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும். மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர் முழிக்கலாமா?’’

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Next Story