சினிமா செய்திகள்

‘ஸ்பைடர் மேன்’ ‘அயன்மேன்’ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம் + "||" + Stan Lee's death, which created the characters of 'Spider-Man' 'Ironman'

‘ஸ்பைடர் மேன்’ ‘அயன்மேன்’ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்

‘ஸ்பைடர் மேன்’ ‘அயன்மேன்’ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்
சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், அயன்மேன், எக்ஸ்மேன், அவஞ்சர்ஸ், ஹல்க், ஆன்ட்மேன், தோர் ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கியவர் எழுத்தாளர் ஸ்டான் லீ.
மார்வெல் காமிக்சில் அவர் உருவாக்கிய இந்த கதாபாத்திரங்கள்தான் ஹாலிவுட்டில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.

இந்த படங்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தன. குறிப்பாக அவர் உருவாக்கிய ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கு உலக ரசிகர்கள் அடிமையாகி இருந்தார்கள். சூப்பர் ஹீரோ படங்களில் ஸ்டான் லீ சிறிய வேடங்களில் நடித்தும் இருந்தார். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தில் எழுத்தாளர், பதிப்பாசிரியர், எடிட்டர், தயாரிப்பாளர் ஆகிய பொறுப்புகளிலும் இருந்தார்.


ஸ்டான் லீக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. ஸ்டான் லீ மறைவு உலகம் முழுவதும் உள்ள சூப்பர் ஹீரோ படங்களின் ரசிகர்களுக்கு துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த ஸ்டான் லீ 1922–ல் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் பிறந்தார். தனது 17–வது வயதிலேயே கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி எழுத தொடங்கினார். 1947–ல் ஜோன் க்ளேடான் போகாக் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள். அதில் ஒருமகள் இறந்து விட்டார். கடந்த 2008–ம் ஆண்டு அமெரிக்க அரசின் மிக உயரிய விருதான நே‌ஷனல் மெடல் ஆப் ஆர்ட்ஸ் விருதை ஸ்டான் லீ பெற்றார்.