புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு


புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Nov 2018 11:30 PM GMT (Updated: 13 Nov 2018 5:39 PM GMT)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.

விஜய் சிகரெட் பிடிக்கும் தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு தமிழக அரசின் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த புகைப்படம் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும், எனவே அதை அகற்ற வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் விஜய்யின் புகைப்பிடிக்கும் தோற்ற படத்தை டுவிட்டரில் இருந்து பட நிறுவனம் நீக்கியது. படம் திரைக்கு வந்த பிறகு அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது.

பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து தியேட்டர்களில் திரையிட்டு உள்ளனர். இப்போது கேரளாவிலும் சர்கார் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.


Next Story