கதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் : டைரக்டர் பாரதிராஜா வற்புறுத்தல்


கதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் : டைரக்டர் பாரதிராஜா வற்புறுத்தல்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 6:55 PM GMT)

டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த 2012–ம் ஆண்டு எனது உதவி இயக்குனர் சுரேஷ் சத்ரியன் 92 என்ற தலைப்பில் கூறிய கதையை கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது நீ, நான், மழை, இளையராஜா என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் தொடங்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.

பிரேம்குமாரால் இயக்கப்பட்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை பார்த்து தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டும் அல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது. என்னிடம் பணியாற்றிய மருது பாண்டியன் 96 படத்தின் கதை விவாதத்தில் இருந்ததன் மூலம் அது 92 படத்தின் கதை என்பது உறுதியாகி உள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரித்து தீர்வு கண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமல் தடுக்க கேட்டுக் கொள்கிறேன்.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story