சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு


சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு
x
தினத்தந்தி 15 Nov 2018 10:58 AM GMT (Updated: 15 Nov 2018 10:58 AM GMT)

சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

திருச்சூர்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த  சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சென்னை பாக்ஸ் ஆபிசில் இதுவரை ரூ11 கோடியை வசூல் செய்து உள்ளது. அமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட  தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதிர்ப்புகள் படத்துக்கு விளம்பரம் தேடி தந்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் சர்கார் மீதான பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. இப்போது,  கேரளாவில் நடிகர் விஜய்க்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சூரில் உள்ள மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே.ஜே.ரீனா தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விஜய் புகைபிடிப்பதை சித்தரித்துக் காட்டும் சுவரொட்டிகள் சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புச் சட்டம் 2003 இன் பிரிவு 5 (2) க்கு எதிராக உள்ளது என்று ரீனா கூறி உள்ளார். விஜய் புகைபிடிப்பது  போன்ற போஸ்டர்  புகைபிடிப்பவர்களின் செயல் பெருமையாக கருதுவதுபோல் உள்ளது என மாவட்ட மருத்துவ அதிகாரி தெளிவுபடுத்தி உள்ளார். இது ஒரு கிரிமினல் குற்றமாகும். திருச்சூரில் உள்ள தலைமை நீதிபதிக்கு நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் அதிகார எல்லைக்குள்  காட்சிப்படுத்திய சுவரொட்டிகளை நாங்கள் அகற்றிவிட்டோம். இது போல் மற்றபகுதிகளிலும் செய்யவேண்டும் என கூறி உள்ளார்.

Next Story