சோனாலி பிந்த்ரேவை தொடர்ந்து நடிகை நபீஸா அலிக்கு புற்றுநோய் பாதிப்பு


சோனாலி பிந்த்ரேவை தொடர்ந்து நடிகை நபீஸா அலிக்கு புற்றுநோய் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:15 PM GMT (Updated: 19 Nov 2018 10:10 PM GMT)

சோனாலி பிந்த்ரேவை தொடர்ந்து, நடிகை நபீஸா அலிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுபோல் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரேவும் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அவர் தற்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக தலை முடியை மொட்டை அடித்த படத்தையும் வெளியிட்டார்.

இந்தி நடிகர் இர்பான்கானும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்தி நடிகை நபீஸா அலியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

இவர் இந்தியில் ஜூனூன், மேஜர் சாப், யம்லா பக்லா தீவானா, பிக் பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அமிதாப்பச்சன், சசிகபூர், தர்மேந்திரா உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

61 வயதாகும் நபீஸாவின் கணவர் பிரபல போலோ விளையாட்டு வீரர் ஆர்.எஸ்.சோதி ஆவார். இவர்களுக்கு அஜீத் சோதி என்ற மகன் உள்ளார். நபீஸா அலி புற்றுநோயால் பாதித்துள்ள தகவல் இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சோனியாகாந்தி சந்தித்து உடல் நலம் விசாரித்த புகைப்படத்தை நபீஸா அலீ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவர் புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story