’கஜா’ புயல் பாதிப்பு : திரையுலக பிரபலங்கள் நிதி உதவி


’கஜா’ புயல் பாதிப்பு : திரையுலக பிரபலங்கள் நிதி உதவி
x
தினத்தந்தி 20 Nov 2018 11:24 AM GMT (Updated: 20 Nov 2018 11:24 AM GMT)

’கஜா’ புயல் பாதிப்புக்கு திரையுலக பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

சென்னை,

’கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.  புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

' கஜா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து  திரை உலக பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

* கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் இயக்குநர் ஷங்கர்.

* கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து ரூ. 5 லட்சம் நிதியுதவி  வழங்கி உள்ளார்.

* கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் ரூ. 40 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

* கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டு உள்ளார்.

* நடிகர் விஜய் சேதுபதி  ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

* நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார்.

*ஜி.வி. பிரகாஷ்  'கஜா' புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பி உள்ளார்.

Next Story