கஜா புயல் நிவாரணத்துக்கு ஜோதிகா படம் டிக்கெட்டில் தலா ரூ.2 ஒதுக்கீடு


கஜா புயல் நிவாரணத்துக்கு ஜோதிகா படம் டிக்கெட்டில் தலா ரூ.2 ஒதுக்கீடு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:30 PM GMT (Updated: 20 Nov 2018 10:04 PM GMT)

கஜா புயல் நிவாரணத்துக்கு, ஜோதிகா படம் டிக்கெட்டில் தலா ரூ.2 ஒதுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவுக்கும் குடிநீருக்கும் அல்லாடும் நிலை உள்ளது. திரையுலகினர் நிவாரண உதவிகள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்-அமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும் மேலும் ரூ.10 லட்சத்துக்கு நிவாரண பொருட்களும் வழங்குவதாக அறிவித்து உள்ளார். நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வழங்குகிறார்கள். இதில் சூர்யா ரூ.20 லட்சமும் கார்த்தி ரூ.15 லட்சமும் சிவகுமார் ரூ.5 லட்சமும் ஜோதிகா ரூ.10 லட்சமும் வழங்குகின்றனர்.

ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூலில் ஒரு பகுதியை கஜா புயலுக்கு வழங்குகிறார்கள். இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“காற்றின் மொழி திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்ப படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு நன்றி. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா பகுதி மக்களுக்கு காற்றின் மொழி படம் மூலம் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தில் இருந்து தயாரிப்பாளரின் பங்கில் ரூ.2 தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தை தயாரித்துள்ள லைகா பட நிறுவனம் புயல் நிவாரணத்துக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் வழங்குகிறது.



Next Story