திருடப்பட்டதாக புகார்: சர்ச்சையில் ‘திமிரு புடிச்சவன்’ கதை


திருடப்பட்டதாக புகார்: சர்ச்சையில் ‘திமிரு புடிச்சவன்’ கதை
x
தினத்தந்தி 22 Nov 2018 11:15 PM GMT (Updated: 22 Nov 2018 10:02 PM GMT)

திமிரு புடிச்சவன் கதை திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் பட உலகில் கதைகள் திருட்டு சர்ச்சைகள் தொடர்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் ‘சர்கார்’ விஜய்சேதுபதியின் ‘96’ ஆகிய படங்கள் இதில் சிக்கின. 96 கதை தனது உதவியாளர் எழுதிய கதை என்று டைரக்டர் பாரதிராஜாவே கூறினார். சர்கார் கதையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பிறகு சமரசம் ஆனார்கள்.

இந்த பிரச்சினையில் பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதிவியையே ராஜினாமா செய்யும் நிலைமை ஏற்பட்டது. இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திமிரு புடிச்சவன் கதை, தன்னுடையது என்று எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை திமிரு புடிச்சவன் படத்தின் இயக்குனர் கணேசா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“திமிரு புடிச்சவன் கதை என்னுடையது. இந்த படம் அனைத்து ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடுகிறது. நான் 25 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். நிறைய கஷ்டங்களை சந்தித்து 2-வது படத்தை இயக்கி உள்ளேன். இப்போது கதைக்கு ராஜேஷ் குமார் உரிமை கோருவது ஏற்புடையது அல்ல. கதை எனக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.

தெலுங்கில் ராஜமவுலியிடம் உதவியாளராக இருந்தபோது இதன் கருவை உருவாக்கினேன். 10 ஆண்டுகள் கழித்துத்தான் அதை படமாக்கி இருக்கிறேன். ராஜேஷ்குமார் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் எழுதிய கதையை நான் படிக்கவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story