சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில் ! குருவியார் + "||" + Cinem question and answer - kuruviyar

சினிமா கேள்வி பதில் ! குருவியார்

சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்தின் ‘பேட்ட,’ அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்து மோத இருக்கிறதாமே... அந்த 2 படங்களும் எப்போது திரைக்கு வருகின்றன? (பி.ஜெயகணபதி, சென்னை-23)

‘பேட்ட,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 2 படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கின்றன. 2 படங்களையும் திரைக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெறுகின்றன.!

***

விஜய்–அஜித் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? (ஆர்.ராம் சுந்தர், திருச்சி)

இருவரும் இணைந்து நடிக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு அமைந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை!

***

கீர்த்தி சுரேஷ் குண்டாகி விட்டாராமே...அப்படியா? (எச்.ஜமாலுதீன், கரூர்)

சந்தோ‌ஷத்தில், ஒரு சுற்று பருமனாகி விட்டாராம். கூடுதல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் அவர் தீவிரமாக இருக்கிறார்!

***

இப்போது ‘மார்க்கெட்’டில் இருக்கும் கதாநாயகிகளில் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பவர் யார்? (ஏ.சாய்குமார், காஞ்சிபுரம்)

ராதிகா ஆப்தே! தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை பொருத்து இவருடைய கவர்ச்சியின் அளவு இருக்குமாம். கூடுதல் கவர்ச்சிக்கு இவர் தனி சம்பளம் வாங்கி வருகிறார்!

***

குருவியாரே, தனுஷ்  மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பாரா?  (சோ.சபாபதி, திருநின்றவூர்)

இப்போது அவர் நடித்து வரும் ‘மாரி–2’ படத்தில், அவருடன் கிருஷ்ணா இணைந்து நடிக்கிறார்! நல்ல கதையம்சம் கொண்ட படம், இன்னொரு கதாநாயகன் வேண்டும் என்று கேட்டால்–தனுஷ் எந்த கதாநாயகனுடனும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறாராம்!

***

குருவியாரே, ஆர்யாவின் படங்களையே காணோமே... அவர் என்ன செய்கிறார்?(கே.ஆர். உதயகுமார், சென்னை-1)

ஆர்யா இப்போது 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக் கிறார். அடுத்து 3 படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்!

***

நகைச்சுவை நடிகர்கள் சூரி, யோகி பாபு ஆகிய 2 பேரில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (என்.குணசிங், திருக்கோவிலூர்)

சூரி. இவர், யோகி பாபுவை விட 2 மடங்கு அதிக சம்பளம் வாங்கி வருகிறார். சூரியை விட, யோகி பாபுவுக்கு இரண்டு மடங்கு அதிக படங்கள் ஒப்பந்தமாகி உள்ளன!

***

குருவியாரே, புலி, ஒன்பதுல குரு, போக்கிரி ராஜா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் இப்போது என்ன படம் தயாரித்து வருகிறார்? (ஜே.பாஸ்கர், பொள்ளாச்சி)

பி.டி.செல்வகுமார் இப்போது ஜீ.வி.பிரகாசை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வசந்தபாலன் டைரக்டு செய்கிறார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன், ‘நாட்டிய பேரொளி’ பத்மினி ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் எது? (எஸ்.ரவீந்திர சிங், ஈரோடு)

‘தாய்க்கு ஒரு தாலாட்டு.’

***

பி.சுசீலா இதுவரை எத்தனை பாடல்களை பாடியிருக்கிறார் (எம்.காஜாமைதீன், புதுச்சேரி)

பி.சுசீலா, இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்‌ஷனில் வெளிவர இருக்கும் ‘2.0’ படம் எத்தனை தியேட்டர்களில் திரையிட இருக்கிறது? (எஸ்.டி.ராஜ், மதுரை)

‘2.0’ படம், உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது!

***

குருவியாரே, ‘பசுபதி’ என்று ஒரு நடிகர் இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (வி.சுப்பிரமணியம், பி.கொமாரபாளையம்)

வில்லனாக அறிமுகமாகி, குணச்சித்ர வேடங்களில் நடித்து, கதாநாயகன் வரை வளர்ந்த பசுபதி, மீண்டும் வில்லனாக நடிக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம்!

***

பாக்யராஜ், சத்யராஜ் ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன? (சி.ஹரிகரன், வாலாஜாப்பேட்டை)

இருவருக்குமே சொந்த ஊர், கோவை. இரண்டு பேரும் வில்லனாக அறி முகமாகி கதாநாயகர்களாக உயர்ந்தவர்கள். பாக்யராஜ் பல படங்களை இயக்கியிருக்கிறார். சத்யராஜ், ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி இருக் கிறார்!

***

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார்? குறைந்த முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு அவர் இசையமைப்பாரா? (டி.ஜேம்ஸ், திருப்பூர்)

ஏ.ஆர்.ரகுமான்! குறைந்த முதலீட்டில் படம் தயாரிப்பவர்கள் இவரை அணுகுவதில்லை. அதிக சம்பளம் கேட்பாரே என்ற தாழ்வுமனப்பான்மை ஒரு காரணம்!

***

‘பாபநாசம்’ படத்தை டைரக்டு செய்த ஜீது ஜோசப் இப்போது எந்த படத்தை இயக்கி வருகிறார்? (பி.சி. லோகநாதன், குடியாத்தம்)

ஜீது ஜோசப், ஒரு மலையாள படத்தை இயக்கி வருகிறார்!

***

குருவியாரே, ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் அறிமுகமாகி தற்போது, ‘சாம்பியன்’ படத்தை இயக்கியுள்ள டைரக்டர் சுசீந்திரன், விளையாட்டு வீரரா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

சுசீந்திரன், விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவர். கபடி, கிரிக்கெட் ஆகிய 2 விளையாட்டுகளின் மீதும் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாம்!

***

குருவியாரே, ரகுல் ப்ரீத்சிங், நயன்தாரா அளவுக்கு உயர்வாரா? (கே.ஜெயபாண்டி, தேவகோட்டை)

கவர்ச்சியாக நடிப்பதிலா, சம்பளத்தை உயர்த்துவதிலா?

***

ஜெய்-அஞ்சலி, விமல்- ஓவியா ஆகிய 2 ஜோடிகளில், எது சிறந்த ஜோடி? (கா.மணிகண்டன், தஞ்சை)

2 ஜோடிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. யாருக்கு அதிக வரவேற்பு என்பதை ஓட்டெடுப்பு நடத்திதான் தீர்மானிக்க வேண்டும்!

***

குருவியாரே, பழைய கதாநாயகிகள் மாதவி, சித்தாரா ஆகிய இருவரும் என்ன ஆனார்கள்? படங்களில் நடிப்பதில்லையா? (எஸ்.கென்னடி, தேனி)

மாதவி, பாட்டியாகி விட்டார். அவர் பேரன்-பேத்தியுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். சித்தாரா, மலையாள படங்களில் நடித்து வருகிறார்!

***