மிரட்டலை மீறி நாளை ஒடிசா செல்லும் ஷாருக்கானுக்கு பலத்த பாதுகாப்பு


மிரட்டலை மீறி நாளை ஒடிசா செல்லும் ஷாருக்கானுக்கு பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 25 Nov 2018 9:18 PM GMT)

மிரட்டலை மீறி நாளை ஒடிசா செல்லும் நடிகர் ஷாருக்கானுக்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான் 2001-ல் நடித்து திரைக்கு வந்த ‘அசோகா’ படத்தை எதிர்த்து அப்போது போராட்டங்கள் நடந்தன. இதனால் அங்கு படத்தை நிறுத்தி விட்டனர். அந்த படம் வெளியாகி 11 வருடங்கள் ஆன நிலையில் “படத்தில் கலிங்க போரை தவறாக சித்தரித்து ஒடிசா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கலிங்க சேனா என்ற அமைப்பு இப்போது மீண்டும் எதிர்ப்பு கிளப்பி உள்ளது.

ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நாளை (27-ந்தேதி) உலக ஆக்கி உலக போட்டியை தொடங்கி வைக்க வருமாறு நடிகர் ஷாருக்கானுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். ஷாருக்கானும் அந்த அழைப்பை ஏற்று அங்கு செல்கிறார்.

இதற்கு கலிங்க சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அசோகா படத்தில் கலிங்க போரை தவறாக சித்தரித்த ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் ஒடிசா வரும் அவரது முகத்தில் மை வீசுவோம். கருப்புகொடியும் காட்டுவோம்” என்று அந்த அமைப்பின் செயலாளர் நிஹார் பானி அறிவித்து உள்ளார்.

ஆனாலும் எதிர்ப்பை மீறி ஷாருக்கான் ஒடிசா செல்கிறார். இதனால் அவருக்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து புவனேஷ்வர் போலீஸ் துணை கமிஷனர் அனூப் சாகு கூறும்போது, “உலக ஆக்கி போட்டிக்கு வரும் ஷாருக்கானுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.



Next Story