டப்பிங் யூனியனில் சந்தா செலுத்தாத 95 பேர் - பாடகி சின்மயி மீண்டும் புகார்


டப்பிங் யூனியனில் சந்தா செலுத்தாத 95 பேர் - பாடகி சின்மயி மீண்டும் புகார்
x
தினத்தந்தி 25 Nov 2018 11:15 PM GMT (Updated: 25 Nov 2018 9:40 PM GMT)

டப்பிங் யூனியனில் சந்தா செலுத்தாமல் 95 பேர் உள்ளதாக, பாடகி சின்மயி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்து கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘96’ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். தற்போது டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்கி உள்ளனர்.

இதுகுறித்து சின்மயி கூறும்போது, “நான் 2 ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால்தான் என்னை நீக்கி இருப்பதாகவும் காரணம் சொல்லி உள்ளனர். சந்தா கட்டாதது குறித்து முன் அறிவிப்புகள் எனக்கு வரவில்லை” என்றார். நீக்கம் காரணமாக புதிய படங்களுக்கு டப்பிங் பேச சின்மயியை இயக்குனர்கள் அழைக்கவில்லை.

இதனால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து சின்மயி கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களுடன்ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் டப்பிங் யூனியன் மீது மீண்டும் புகார் கூறி டுவிட்டரில் சின்மயி கூறியிருப்பதாவது:-

“டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் 95 பேர் சந்தா செலுத்தாமல் உள்ளனர். 2016-ல் இருந்து இந்த கட்டணத்தை அவர்கள் செலுத்தவில்லை. ஆனால் என்னை மட்டும் தனிமைப்படுத்தி சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர். நான் 2016 பிப்ரவரி மாதம் எனது ஆயுட்கால சந்தா தொகையை வங்கி மூலம் செலுத்தி விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story