அரசியல்வாதிகள் கடமையை சரியாக செய்தால் ‘‘நடிகர்-நடிகைகளுக்கு வேலை இருக்காது’’ - நடிகர் ஆரி


அரசியல்வாதிகள் கடமையை சரியாக செய்தால் ‘‘நடிகர்-நடிகைகளுக்கு வேலை இருக்காது’’ - நடிகர் ஆரி
x
தினத்தந்தி 27 Nov 2018 11:30 PM GMT (Updated: 28 Nov 2018 12:31 AM GMT)

கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டை மையப்படுத்தி, ‘தோனி கபடி குழு’ என்ற படம் தயாராகி இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் ஆரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

‘பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இந்த படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கிறார்கள். எங்கிருந்தெல்லாமோ நிவாரண உதவிகள் குவிகிறது. சென்னையை தாண்டி பிற இடங்களில் ஏதாவது நேர்ந்தால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால், இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.

அரசியல்வாதிகள் தங்கள் கடமையை சரியாக செய்தாலே நடிகர்-நடிகைகளுக்கு வேலை இருக்காது.

பொதுமக்கள் பாதிக்கப்படும்போது உதவுவதற்காக, சினிமாவை வாழ வைக்க வேண்டும். திரையங்கங்களில் ‘ஆன் லைன்’ பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு நேர காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.’

இவ்வாறு ஆரி பேசினார்.

விழாவில், படத்தின் கதாநாயகன் அபிலாஷ், கதாநாயகி லீமா, டைரக்டர் ஐயப்பன், தயாரிப்பாளர் எஸ்.நந்தகுமார், இசையமைப்பாளர் ரோ‌ஷன் ஜேக்கப், பட அதிபர் இஷாக் ஆகியோரும் பேசினார்கள்.

Next Story