‘சர்கார்’ பட சர்ச்சை : அரசை சாடிய கமல்ஹாசன்


‘சர்கார்’ பட சர்ச்சை : அரசை சாடிய கமல்ஹாசன்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:30 PM GMT (Updated: 28 Nov 2018 10:14 PM GMT)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது.

சர்கார்  படத்தில் அரசின் இலவச பொருட்களை தீயில் எரிப்பது, வில்லி கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டியது உள்ளிட்ட சர்ச்சை காட்சிகள் இருந்தன.

இதனை அ.தி.மு.கவினர் எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். இதனால் சர்ச்சை காட்சிகளை படக்குழுவினர் நீக்கி விட்டு மீண்டும் தணிக்கை செய்து படத்தை திரையிட்டனர். இதற்கிடையில் தமிழக அரசை விமர்சித்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர் கைதாகலாம் என்ற பரபரப்பும் நிலவியது.

தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் “சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச நலத்திட்டங்களையும் முன்னாள் முதல்-அமைச்சரையும் மறைமுகமாக சித்தரித்து உள்ளனர். இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் அரசின் கொள்கை முடிவுகளை திரைப்படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்று அவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்றார்.

இதனை நடிகர் கமல்ஹாசன் கண்டித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், “சர்கார் திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. கருத்துரிமைக்கு எதிராக அரசு செயல்படக்கூடாது. இது ஜனநாயகம் இல்லை. பாசிசம் ஏற்கனவே முறியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதை செயல்படுத்த முயற்சிக்கிறது” என்றார். 

Next Story