நடிகர் அம்பரீசுடன் சேர்த்து விஷ்ணுவர்தனுக்கும் நினைவிடம் அமைக்க வற்புறுத்தல்


நடிகர் அம்பரீசுடன் சேர்த்து விஷ்ணுவர்தனுக்கும் நினைவிடம் அமைக்க வற்புறுத்தல்
x
தினத்தந்தி 29 Nov 2018 9:30 PM GMT (Updated: 29 Nov 2018 8:06 PM GMT)

பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன். இவர் தமிழில் விடுதலை, ராகவேந்திரா, அலைகள், மழலை பட்டாளம், ஈட்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன். இவர் தமிழில் விடுதலை, ராகவேந்திரா, அலைகள், மழலை பட்டாளம், ஈட்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விஷ்ணுவர்தன் 9 வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்தபோது அவருக்கு நினைவிடம் அமைக்க அரசு முடிவு செய்தது. ஆனால் இதுவரை பணிகள் நடக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி மரணம் அடைந்த நடிகர் அம்பரீசுக்கு பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் நினைவிடம் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதே இடத்தில்தான் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவிடமும் உள்ளது. அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்கும்போது விஷ்ணுவர்தனுக்கும் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விஷ்ணுவர்தன் மனைவி பாரதி கூறும்போது, “எனது கணவர் விஷ்ணுவர்தன் இறந்து 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கர்நாடக அரசு அவருக்கு நினைவிடம் அமைக்கவில்லை. எனது கணவருக்கு நினைவிடம் அமைக்க முந்தைய அரசு மைசூருவில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. அந்த நிலம் பிரச்சினையில் உள்ளது. 9 ஆண்டுகளாக நினைவிடம் அமைக்க போராடியும் பயன் இல்லை” என்றார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறும்போது “கர்நாடக மக்களின் மதிப்புக்குரிய ராஜ்குமார், அம்பரிஷ், விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு அருகருகே நினைவிடம் அமைப்பதுதான் சிறப்பாக இருக்கும்” என்றார்.

Next Story