வெளிநாட்டு கச்சேரிகளுக்கு கட்டணம் இளையராஜா பாடல்களை பாட ஆண்டுக்கு ரூ.20 லட்சம்


வெளிநாட்டு கச்சேரிகளுக்கு கட்டணம் இளையராஜா பாடல்களை பாட ஆண்டுக்கு ரூ.20 லட்சம்
x
தினத்தந்தி 29 Nov 2018 11:00 PM GMT (Updated: 29 Nov 2018 8:24 PM GMT)

கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தார்.

கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதை எதிர்த்து அவருக்கு நோட்டீசும் அனுப்பினார்.

இதனால் இளையராஜாவின் பாடல்களை அவர் பாடவில்லை. ஆனாலும் ஐதராபாத்தில் சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டியில் கச்சேரிகளில் மீண்டும் இளையராஜா பாடல்களை பாடுவேன் என்றும் இதற்காக அவர் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் சந்திப்பேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பின்னணி பாடகர்கள் பாடக் கூடாது என்று கண்டித்துள்ளார். மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். பாடகர்கள், பாடகிகளும் எனது பாடலுக்கு பணம் வாங்குகிறார்கள். அந்த பணத்தில்தான் பங்கு கேட்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இளையராஜா பாடல்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட ‘ஏ’ பிரிவினருக்கு வருடத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ‘பி’ பிரிவினருக்கு ரூ.15 லட்சமும் ‘சி’ பிரிவினருக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயித்து உள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், சித்ரா உள்ளிட்ட பெரிய பாடகர்களின் கச்சேரி ஏ பிரிவு என்றும் அதை விட சிறிய பாடகர்கள் கச்சேரி பி பிரிவு, சி பிரிவு என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில் மைதானங்களில் நடக்கும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாடுவதற்கு ரூ.75 ஆயிரமும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பாட ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் ஓட்டல்களில் பாட ரூ.30 ஆயிரமும் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.

ராயல்டியை வசூல் செய்யும் உரிமையை இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு இளையராஜா வழங்கி உள்ளதால் அவருக்கு அந்த சங்கத்தின் தலைவர் தினா நன்றி தெரிவித்து உள்ளார்.

Next Story